அனுமதியின்றி இயங்கிய 12 டாஸ்மாக் கடை பார்களுக்கு ‘சீல்’ வைப்பு - அதிகாரிகள் நடவடிக்கை


அனுமதியின்றி இயங்கிய 12 டாஸ்மாக் கடை பார்களுக்கு ‘சீல்’ வைப்பு - அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 26 Aug 2018 4:00 AM IST (Updated: 26 Aug 2018 3:04 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் பகுதிகளில் அனுமதியின்றி இயங்கிய 12 டாஸ்மாக் கடை பார்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

வேலூர்,

சேலம் டாஸ்மாக் மண்டலத்தின்கீழ் சேலம், வேலூர், அரக்கோணம், தர்மபுரி, திருவண்ணாமலை, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் சேலம் கோட்ட முதுநிலை மண்டல மேலாளர் இளங்கோவன் தலைமையில் டாஸ்மாக் பொது மேலாளர்கள் கடந்த சில நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர்.

அரக்கோணம் பகுதி டாஸ்மாக் கடைகளில் கிருஷ்ணகிரி மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் தேவகி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் அரக்கோணம் கலால் போலீசார் நேற்று ‘திடீர்’ ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? அனுமதியின்றி பார் இயங்குகிறதா? எனச் சோதனை செய்தனர்.

அப்போது அரக்கோணம் பகுதிகளில் 12 டாஸ்மாக் கடைகளில் அனுமதியின்றி பார் இயங்குவது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த 12 டாஸ்மாக் கடை பார்களுக்கு, ‘சீல்’ வைத்தனர்.

இதேபோல் வேலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் திருவண்ணாமலை டாஸ்மாக் பொது மேலாளர் புஷ்பலதா தலைமையிலான குழுவினர் நேற்று ‘திடீர்’ ஆய்வு செய்தனர். இவர்கள் டாஸ்மாக் கடைகளின் வரவு, செலவு கணக்குகளை தணிக்கை செய்தனர். மேலும் மதுபானங்களின் இருப்பு, வாடிக்கையாளர்களின் குறைகள், எந்த மதுவகைகளின் விற்பனை குறைந்துள்ளது, எதற்காக குறைந்துள்ளது. விற்பனை சரியாக செய்யப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

வேலூர் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், “இந்த ஆய்வு சுமார் 30 டாஸ்மாக் கடைகளில் நடத்தப்பட்டது என தெரிவித்தனர். அதிகாரிகள் மேலும் கூறுகையில், உமராபாத் பகுதியில் ஒரு கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை அமைய உள்ளது. ஆனால் அதற்கு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏனெனில், சிலர் அங்கு அதிக விலைக்கு அரசு மதுபானங்களை வெளியே வாங்கி விற்கின்றனர். அரசு டாஸ்மாக் கடை அங்கு அமைந்தால் அவர்களின் விற்பனை குறையும் என்பதால், அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். ஆனால் ஒரு தரப்பினர் அங்கு டாஸ்மாக் கடை அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்” என்றனர்.

Next Story