‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு பேரணி: போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்


‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு பேரணி: போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 26 Aug 2018 4:30 AM IST (Updated: 26 Aug 2018 3:43 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்,

இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களும் கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணிந்து செல்ல வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறையை விழுப்புரம் மாவட்டத்தில் அமல்படுத்தும் விதமாக காவல்துறை சார்பில் பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று போலீசார் ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் தலையில் ‘ஹெல்மெட்’ அணிந்தபடி இருசக்கர வாகனம் ஓட்டியவாறு பேரணியாக சென்றார். அவரை தொடர்ந்து ஒவ்வொரு மோட்டார் சைக்கிள்களிலும் ஆயுதப்படை போலீசார் 2 பேர் வீதம் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ‘ஹெல்மெட்’ அணிந்தபடி பேரணியாக சென்றனர். இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. அதன் பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொதுமக்கள் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வது அவசியம். கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் சாலை விபத்துகளில் 834 பேர் இறந்துள்ளனர். இவர்களில் இருசக்கர வாகனத்தில் சென்ற 300 பேர் விபத்தில் சிக்கி இறந்துள்ளனர். இதில் 299 பேர் ‘ஹெல்மெட்’ அணியாமல் வாகனத்தை ஓட்டிச்சென்று விபத்தில் சிக்கி இறந்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஆகவே ஒவ்வொருவரும் விபத்து உயிரிழப்பில் இருந்து நம்மை பாதுகாக்க வேண்டும். இதற்காக பள்ளி- கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம், ஆட்டோ நிறுத்தங்களில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆகவே இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் ரூ.100 அபராதம் விதிக்கப்படும். எனவே ‘ஹெல்மெட்’ என்பது நமது உயிரை காத்துக்கொள்ள அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி, ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) நீதிராஜ், இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாசம், தர்மராஜ், துரைராஜ், முத்துசாமி, பிரபாவதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story