தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாததால் நாயிடம் மனு கொடுத்த தி.மு.க.வினரால் பரபரப்பு
சிவன்மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாமல் போனதால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.வினர் நாயிடம் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கேயம்,
காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவியது. இதைத்தொடர்ந்து இந்த சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவரான தி.மு.க. பிரமுகர் ஆர்.எம்.கந்தசாமி சிவன்மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தேர்தல் நியாயமாக நடக்க போலீஸ் பாதுகாப்பு வேண்டும், தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஏப்ரல் மாதம் 9–ந் தேதி நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனு தாக்கல் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. இவை அனைத்தும் வீடியோ பதிவும் செய்யப்பட்டது. இதில் மொத்தம் 60 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனை ஏப்ரல் மாதம் 24–ந் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. அப்போதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. இறுதியில் 29 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 31 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க.வினரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அதிகாரிகள் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம்சாட்டி அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் கோர்ட்டு உத்தரவுப்படி சிவன்மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று காலை மீண்டும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு வேட்புமனுக்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. தேர்தல் அதிகாரியாக சுரேஷ்குமார் செயல்பட்டார். காலை முதல் மாலை வரை வேட்பு மனு தாக்கல் செய்வதாக கூறி ஏராளமானவர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர்.
ஆனால் அ.தி.மு.க.வினர் வெளியாட்களை கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர். இதனால் வேட்பு மனுக்கள் செய்யப்படும் போது கோர்ட்டு உத்தரவுப்படி வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்று தி.மு.க.வினர், தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தனர். ஆனால் இதற்கு அ.தி.மு.க.வினர் ஆட்சேபம் தெரிவித்தனர். மேலும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது ஏப்ரல் மாதம் நடந்த மனுதாக்கலுக்குத்தான், இப்போது நடக்கும் தேர்தலுக்கு இது பொருந்தாது என்று கூறினார்கள். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி தலைமையில் 50–க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க இரும்பு தடுப்புகள் கொண்டுவந்து வைக்கப்பட்டன. இந்த நிலையில் மாலை 5 மணிக்கு வேட்பு மனு தாக்கல் முடிந்ததாகவும், 150 பேர் மட்டும் மனு தாக்கல் செய்துள்ளனர் என்றும் தேர்தல் அதிகாரி கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.வினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, எங்களை மனு தாக்கல் செய்ய விடாமல் அ.தி.மு.க.வினர் திட்டமிட்டே 500–க்கும் மேற்பட்ட வெளியாட்களை கொண்டு வந்து வேட்பு மனு தாக்கல் செய்வது போல் வரிசையாக நிற்க வைத்து, காலதாமதம் செய்து தி.மு.க.வினரை மனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இதற்கு அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டி கோஷம் எழுப்பினார்கள்.
பின்னர் வேட்பு மனுதாக்கல் செய்ய முடியாமல் போனதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாயிடம் மனு கொடுக்க முடிவுசெய்தனர். இதற்காக தி.மு.க.வினர் ஒரு நாயை கொண்டு வந்து அதனிடம் மனு கொடுத்தனர். பின்னர் அனைவரும் கலைந்துசென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.