திருப்பூர் கூட்டுறவு சங்க தேர்தல்: வேட்பு மனுவை பெறக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தால் பரபரப்பு


திருப்பூர் கூட்டுறவு சங்க தேர்தல்: வேட்பு மனுவை பெறக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Aug 2018 5:45 AM IST (Updated: 26 Aug 2018 5:25 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தேர்தலுக்கு 29 பேர் மனு தாக்கல் செய்தனர். வேட்புமனுவை பெறக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்திற்கு தலைவர், துணைத்தலைவர் மற்றும் 9 இயக்குனர்கள் என 11 பதவிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 30–ந் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வேட்பு மனு தாக்கல் நடைபெற்ற போது, அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக வேட்பு மனு தாக்கல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.

இதனால் காலையில் இருந்தே பலர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்து கொண்டிருந்தனர். இதனால் நீண்ட வரிசையில் அரசியல் கட்சியினர் மற்றும் உறுப்பினர்கள் பலர் காத்து நின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். இதற்கிடையே மாலை 5 மணிக்கு வேட்பு மனு பெறப்படும் நேரம் முடிந்து விட்டது எனக்கூறி தேர்தல் அதிகாரி கண்ணப்பன் வெளியே சென்று விட்டார். நேற்று 29 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். வருகிற 1–ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கிடையில் திட்டமிட்டு ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரி செயல்பட்டு, வேட்பு மனுவை பெறாமல் சென்றுவிட்டார். எனவே கம்யூனிஸ்டு கட்சியினரின் வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரி பெற வேண்டும் எனக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க நுழைவு வாசல் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சங்கத்திற்குள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் ஒருவர் நுழைய முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீஸ் உதவி கமி‌ஷனர் அண்ணாத்துரை மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிச்சையா, தென்னரசு உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்தனர். தொடர்ந்து அங்கு வடக்கு தாசில்தார் ஜெயக்குமார் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தாசில்தாரிடமும், வடக்கு போலீசாரிடமும் முறைகேடாக செயல்படும் தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார், போலீசார் உறுதியளித்தனர்.

இதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். வேட்பு மனு தாக்கலின் காரணமாக அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முத்து கண்ணன் தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:–

கம்யூனிஸ்டு கட்சியினரிடம் திட்டமிட்டே தேர்தல் அதிகாரி வேட்பு மனுக்களை பெறாமல் சென்றுவிட்டார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுங்கட்சியினரின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணியாமல் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். அல்லது நியாயமான முறையில் தேர்தலை நடத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story