யானை தந்தங்களை கடத்தி வந்து விற்க முயற்சி; 3 வாலிபர்கள் கைது

கடலூர் அருகே யானை தந்தங்களை கடத்தி வந்து விற்க முயன்ற 3 வாலிபர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களின் கூட்டாளிகள் 2 பேரை போலீசார் வலைவிசி தேடி வருகின்றனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
கடலூர்,
கடலூர் அருகே உள்ள ஆலப்பாக்கத்தில் கடலூர்–சிதம்பரம் மெயின்ரோட்டில் அமைந்துள்ள ஒரு ஓட்டலில் சிலர் தங்கியிருந்து யானை தந்தங்களை விற்க பேரம் பேசுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் சிறப்பு படை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நடராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்–இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் சில போலீசார் மாறுவேடத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்றனர்.
அங்குள்ள ஒரு அறையில் சிலர் யானை தந்தங்களை கடத்திக்கொண்டு வந்து வைத்திருந்து விற்க பேரம் பேசிக்கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள், வன்னியர்பாளையத்தைச்சேர்ந்த பிரகாஷ்(வயது35), வேலங்கிராயன் பட்டு கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன்(28), குருவப்பன்பேட்டையை சேர்ந்த கொளஞ்சி(33) என்பது தெரியவந்தது. அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்த 2 யானை தந்தங்களையும், ஓட்டல் வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்களை புதுச்சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர். 3 பேரையும் இன்ஸ்பெக்டர் அமுதா கைது செய்தார். மேலும் இது தொடர்பாக இவர்களின் கூட்டாளிகளான வேலங்கிராயன்பட்டை சேர்ந்த அனந்தராமன், ராமன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களை பிடித்தால் தான் யானை தந்தம் எங்கிருந்து கிடைத்தது என்ற விவரம் தெரியும் என கூறப்படுகிறது. இவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்களை மட்டும் மாவட்ட வனத்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர். அந்த தந்தங்களின் தன்மையை பரிசோதிப்பதற்காக அதனை கால்நடை மருத்துவமனைக்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர்.
இது பற்றி மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் நிருபர்கள் கேட்ட போது, வண்டலூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட வனவிலங்கு ஆராய்ச்சி நிலையத்தில் அந்த தந்தத்தை சோதித்தால் தான் உண்மையான தந்தமா? என்பது தெரியவரும்.
ஏனெனில் வனவிலங்குகளின் எலும்புகளையும் யானை தந்தம் போல மாற்றி ஏமாற்றி விற்பனை செய்கின்றனர். எனினும் அவர்களுக்கு இந்த தந்தங்கள் எப்படி கிடைத்தது என்பது பற்றி வனத்துறை சார்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றனர்.