மானாமதுரை ரெயில் நிலையத்தில் 1½ மணி நேரமாக ரெயிலை எடுக்காததால் என்ஜின் முன்பு பயணிகள் போராட்டம்
மானாமதுரை ரெயில் நிலையத்தில் 1½ மணி நேரமாக ரெயிலை எடுக்காததால் என்ஜின் முன்பு தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மானாமதுரை,
விருதுநகரில் இருந்து திருச்சிக்கும், இதேபோன்று திருச்சியில் இருந்து விருதுநகருக்கும் புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை வழியாக பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் இந்த ரெயிலில் விருதுநகர், அருப்புக்கோட்டை பயணிகள் மற்றும் அப்பகுதிகளை சேர்ந்த அரசு ஊழியர்கள், பள்ளி–கல்லூரி மாணவர்கள் தங்களது தேவைக்காக காரைக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இந்த பாசஞ்சர் ரெயிலை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று மாலை திருச்சியில் இருந்து புறப்பட்ட அந்த பாசஞ்சர் ரெயில், இரவு 7.15 மணிக்கு மானாமதுரை வந்தது. அப்போது அந்த ரெயில், சரக்கு ரெயிலின் கிராசிங்கிற்காக நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாகியும் ரெயில் புறப்படாததால், அதில் வந்த அருப்புக்கோட்டை, விருதுநகர் செல்லும் பயணிகள் கடும் அவதியடைந்தனர். மேலும் ஆத்திரமடைந்த பயணிகள் 100–க்கும் மேற்பட்டோர் ரெயில் என்ஜின் முன்பு தண்டவாளத்தில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில் நிலைய அதிகாரிகள் போராட்டம் நடத்திய பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகளும், ரெயில்வே போலீசாரும் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தனர். இதனையடுத்து அந்த ரெயில் 8.45 மணிக்கு புறப்பட்டு சென்றது.