திருவாரூர் விஜயபுரம் வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை


திருவாரூர் விஜயபுரம் வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 28 Aug 2018 4:00 AM IST (Updated: 28 Aug 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் விஜயபுரம் வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கலெக்டருக்கு, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள வேலங்குடி கிராம மக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் அருகே உள்ள வேலங்குடி கிராமத்துக்கு விஜயபுரம் வாய்க்கால் மூலம் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கிறது. இந்த வாய்க்கால் விளமல் ஓடம்போக்கி ஆற்றில் இருந்து பிரிகிறது. 7 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த வாய்க்காலில் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் வாய்க்காலில் கலக்கிறது. இதனால் வாய்க்கால், கழிவு நீரோடையாக மாறிவிட்டதால் பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வேலங்குடி கிராம மக்கள் சார்பில் வாய்க்காலில் மராமத்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதன்படி இந்த ஆண்டு கடந்த 25-ந் தேதி சப்பாவூர் என்ற இடத்தில் பொக்லைன் எந்திரத்தின் மூலம் வாய்க்காலில் மராமத்து பணி மேற்கொண்டபோது சிலர் தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விஜயபுரம் பாசன வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டது குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் பல முறை புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விஜயபுரம் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாய்க்காலை தூர்வார கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளை ஒன்று திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story