மேட்டூர் அணைக்கு 22 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்தது 16 கண்பாலத்தில் தண்ணீர் திறப்பது நிறுத்தம்


மேட்டூர் அணைக்கு 22 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்தது 16 கண்பாலத்தில் தண்ணீர் திறப்பது நிறுத்தம்
x
தினத்தந்தி 28 Aug 2018 11:00 PM GMT (Updated: 28 Aug 2018 10:02 PM GMT)

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் 16 கண்பாலத்தில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு உள்ளது.

மேட்டூர்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக வந்ததை தொடர்ந்து அப்படியே அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் காவிரியில் வெள்ளம் இருகரையையும் தொட்டப்படி சென்றது.

இந்த நிலையில் கடந்த வாரத்தில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. கடந்த 23–ந்தேதி நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அதே நேரத்தில் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் 20 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனால் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண்பாலம் வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு அணையை ஒட்டி அமைந்து உள்ள நீர்மின்நிலையங்கள் வழியாக தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு கடந்த 25–ந்தேதி மீண்டும் அதிகரிக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. கடந்த 26–ந்தேதி அணைக்கு வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணை நிரம்பி உள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்தானது 26 ஆயிரம் கனஅடியாக அதிகரித்ததால் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 26–ந்தேதி காலை மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்தானது வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக குறைந்து உள்ளது.

இதை தொடர்ந்து அணையில் இருந்து டெல்டா மற்றும் காவிரி பாசனத்துக்காக வினாடிக்கு 20 ஆயிரத்து 800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120.05 அடியாக உள்ளது. நீர்வரத்து 22 ஆயிரம் கனஅடியாக குறைந்து உள்ளதால் நேற்று காலை முதல் 16 கண்பாலம் வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு உள்ளது.

மேட்டூர் புதிய பாலத்தில் நின்று ஏராளமான சுற்றுலா பயணிகள் 16 கண் பாலம் வழியாக வழிந்தோடும் தண்ணீரின் அழகை பார்த்து ரசிப்பார்கள். இதனால் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறும் நாட்களில் புதிய பாலத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும். தற்போது 16 கண் பாலம் வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் இன்றி புதிய பாலம் வெறிச்சோடி காணப்படுகிறது.


Next Story