சேதுபாவாசத்திரத்தில் விசைப்படகு மீனவர்கள் 5–வது நாளாக வேலை நிறுத்தம் 3 ஆயிரம் பேர் வேலை இழப்பு


சேதுபாவாசத்திரத்தில் விசைப்படகு மீனவர்கள் 5–வது நாளாக வேலை நிறுத்தம் 3 ஆயிரம் பேர் வேலை இழப்பு
x
தினத்தந்தி 30 Aug 2018 4:15 AM IST (Updated: 29 Aug 2018 10:31 PM IST)
t-max-icont-min-icon

சேதுபாவாசத்திரத்தில் விசைப்படகு மீனவர்கள் 5–வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 3 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 90 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். இந்த துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகளில் இரட்டைமடி வலை உள்ளதா? என்பது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

அப்போது நிறுத்தி வைத்திருக்கும் படகுகளை ஆய்வு செய்வது முறையல்ல என்றும், கடலில் மீன்பிடிக்கும்போது தவறு நடந்தால் நடவடிக்கை எடுங்கள் என்றும் மீனவர்கள் கூறினர். இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.


இந்த நிலையில் சேதுபாவாசத்திரத்தை சேர்ந்த மீனவர்கள் 5 பேர் இரட்டைமடி வலை பயன்படுத்தியதாக கூறி, அவர்களின் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அதிகாரிகள் அனுமதி டோக்கனை வழங்கவில்லை.

மேலும் அவர்களுக்கான மானிய டீசலையும் ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இந்த நடவடிக்கை தகுந்த ஆதாரங்கள் இன்றி எடுக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.


அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்தும், மீனவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரியும் கடந்த 25–ந் தேதி முதல் சேதுபாவாசத்திரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 5–வது நாளாக வேலை நிறுத்தம் நீடித்தது.

மீனவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக மீன்பிடி தொழிலாளர்கள், மீன் வியாபாரிகள், மீன் சந்தைகளில் கடை வைத்துள்ள வியாபாரிகள் என மொத்தம் 3 ஆயிரம் பேர் வேலை இழந்து, பாதிக்கப்பட்டுள்ளனர். கோரிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story