வேப்பந்தட்டை அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


வேப்பந்தட்டை அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 Sep 2018 11:00 PM GMT (Updated: 4 Sep 2018 7:03 PM GMT)

வேப்பந்தட்டை அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே தழுதாழை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிணறுகளில் வறட்சியின் காரணமாக போதிய அளவில் தண்ணீர் கிடைக்கவில்லை. மேலும் ஆழ்குழாய் கிணறுகளிலும் மின் மோட்டார்கள் பழுது ஏற்பட்டதையும் ஊராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை. இதனால் கடந்த ஒரு வாரமாக தழுதாழை பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கூறியும், இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் தழுதாழையில் உள்ள அரும்பாவூர் -பெரம்பலூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அரும்பாவூர் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவாசகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அரும்பாவூர் -பெரம்பலூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story