ஸ்டெர்லைட் ஆலைக்கு 2013–ம் ஆண்டு முதல் இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களின் விவரத்தை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு


ஸ்டெர்லைட் ஆலைக்கு 2013–ம் ஆண்டு முதல் இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களின் விவரத்தை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 Sep 2018 11:30 PM GMT (Updated: 4 Sep 2018 7:39 PM GMT)

2013–ம் ஆண்டு முதல் இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களின் விவரத்தை தாக்கல் செய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

தூத்துக்குடியைச் சேர்ந்த பிரின்ஸ் கார்டோசா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–

வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை 900 டன் முதல் 1,200 டன் வரை தாமிர உற்பத்திக்கான லைசென்சு பெற்றது. அப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு 172 எக்டேர் நிலம் உள்ளதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்த தகவல் தவறானது. ஸ்டெர்லைட் ஆலைக்கு 102 எக்டேர் பரப்பளவில்தான் நிலம் உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வில் கூட இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்படவில்லை. ஆலையில் இருந்து மெர்குரி உள்பட கழிவுகளை வெளியேற்றவும் போதிய திட்டங்கள் வகுக்கவில்லை. நிறுவனத்தைச் சுற்றிலும் நிலத்தடி நீரில் குளோரைடு, சல்பேட் உள்ளிட்டவைகளின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளது. இந்த நிறுவனத்தை சுற்றிலும் 15 கிராமங்களின் நிலத்தடி நீரின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 15 இடங்களிலும் நிலத்தடி நீர் கடுமையாக மாசு அடைந்திருப்பதும், அவை குடிப்பதற்கு உகந்ததாக இல்லை என்பதும் தெரியவந்தது. எனவே மத்திய–மாநில சுற்றுச்சூழல் துறை சார்பில் இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, “ஸ்டெர்லைட் ஆலைக்கு தாமிர மூலப்பொருட்கள் எவ்வளவு இறக்குமதி செய்யப்பட்டது என்பது பற்றி தூத்துக்குடி சுங்கத்துறை கமி‌ஷனர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்“ என்று உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது எந்த காலக்கட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களின் புள்ளி விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்பதை கோர்ட்டு தெரிவிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம், மத்திய அரசு தரப்பில் முறையிடப்பட்டது.

இதற்கு, கடந்த 2013–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் வரை ஸ்டெர்லைட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களின் விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை வருகிற 24–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story