விவசாயிகள் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வாங்க ரூ.4½ கோடி ஒதுக்கீடு - கலெக்டர் தகவல்


விவசாயிகள் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வாங்க ரூ.4½ கோடி ஒதுக்கீடு - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 4 Sep 2018 11:30 PM GMT (Updated: 4 Sep 2018 9:29 PM GMT)

வேலூர் மாவட்ட விவசாயிகள் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வாங்க ரூ.4½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

வேலூர்,

வேலூர் மாவட்ட விவசாயிகள் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வாங்க ரூ.4½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண் எந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் 2018-2019-ம் ஆண்டில் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல் மற்றும் வேளாண் எந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையம் மானிய விலையில் அமைத்தல் முதலான திட்டங்கள் வேலூர் மாவட்டத்தில் ரூ.4 கோடியே 53 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.

இந்த திட்டத்தில் 8 குதிரைதிறன் முதல் 70 குதிரைதிறன் வரை சக்திகொண்ட டிராக்டர்கள், பவர் டில்லர், நெல்நடவு எந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, கதிர் அறுக்கும் எந்திரம், சுழல் கலப்பை, விசை களையெடுப்பான், விதைக்கும் கருவி, தட்டைவெட்டும் கருவி முதலான கருவி மற்றும் மனித சக்தியால் இயக்கப்படும் கருவிகளை விவசாயிகள் மானிய விலையில் வாங்கி பயன்பெறலாம்.

சிறு, குறு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையும், இதர விவசாயிகளுக்கு 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை இவற்றில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படுகிறது.

உயர் தொழில்நுட்ப, அதிக விலையில்லா எந்திரங்களை வாங்க அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெற விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை உழவன் செயலியில் இணைக்கவேண்டும்.

அதிக விலையுள்ள வேளாண் எந்திரங்களை விவசாயிகள் குறைந்த வாடகையில் பெற வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் மானிய உதவியுடன் அமைக்கப்படுகிறது. விவசாயிகள், விவசாய குழுக்கள் அல்லது தொழில்முனைவோர் பயனாளிகள் ஆவார்கள்.

ரூ.25 லட்சம் மதிப்புடைய வாடகை மையங்கள் அமைக்க 40 சதவீதம் மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். கிராமங்களில் குறைந்த பட்சம் 8 உறுப்பினர்களை கொண்ட விவசாய குழுக்கள் மொத்தம் ரூ.10 லட்சத்திற்கு குறையாத மதிப்புடைய பண்ணைய எந்திரங்களை வாங்கி, வாடகை மையங்களை நடத்தலாம். இதற்கு 80 சதவீதம் மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.8 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

வேளாண் எந்திரமயமாக்கும் திட்டத்தில் தனிப்பட்ட வேளாண் எந்திரங்களை விவசாயிகள் மானியத்தில் பெற ஏதுவாக 49 டிராக்டர்கள், 43 பவர் டில்லர்கள் மற்றும் 151 இதர எந்திரங்கள் வாங்கிக்கொள்ள நடப்பாண்டில் ரூ.1 கோடியே 41 லட்சத்து 55 ஆயிரமும், 35 வாடகை மையங்கள் அமைக்க ரூ.3 கோடியே 12 லட்சமும் வேலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மானிய விலையில் எந்திரங்கள் மற்றும் கருவிகள் பெற விரும்பும் விவசாயிகள் உடனடியாக உழவன் செயலியில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story