குட்கா லஞ்ச ஊழல் வழக்கு: போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை; முக்கிய ஆவணங்கள் சிக்கின
குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக ஆறுமுகநேரியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
ஆறுமுகநேரி,
குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக ஆறுமுகநேரியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இது ஆறுமுகநேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனைதடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தமிழகத்தில் முறைகேடாக விற்பனை செய்வதற்கு அமைச்சர் முதல் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து குட்கா லஞ்ச ஊழல் வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் நேற்று அதிரடி திருப்பம் ஏற்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று காலை முதல் சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி.ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகள் உள்ளிட்ட 40 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆறுமுகநேரியில்...தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பெருமாள்புரத்தில் அரசு காவலர் குடியிருப்பு உள்ளது. இங்கு ஆறுமுகநேரி, ஆத்தூரில் பணியாற்றும் போலீசார் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இங்கு 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 4 சப்–இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 73 போலீசாருக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தரைத்தளத்தில் தூத்துக்குடி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் சம்பத் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது வீட்டிற்கு நேற்று காலை 7.30 மணி அளவில் மதுரையைச் சேர்ந்த சி.பி.ஐ. அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் 2 கார்களில் வந்தனர். அவர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டரின் வீட்டுக்குள் சென்றனர். வீட்டில் இன்ஸ்பெக்டர் மற்றும் குடும்பத்தினர் இருந்தனர். அப்போது இன்ஸ்பெக்டர் சம்பத்தின் 2 மகள்களும் பள்ளிக்கூடத்துக்கு செல்ல தயாராக இருந்தனர். இதையடுத்து அவர்களை பள்ளிக்கூடத்துக்கு செல்ல சி.பி.ஐ. அதிகாரிகள் அனுமதித்தனர்.
முக்கிய ஆவணங்கள் சிக்கினபின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத், அவருடைய மனைவி அகல்யா ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். மேலும் வீடு முழுவதும் அதிகாரிகள் துருவி துருவி சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் இருந்த பல முக்கியமான ஆவணங்கள் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மாலை வரையிலும் சி.பி.ஐ. அதிகாரிகளின் சோதனை நீடித்தது.
பரபரப்புபோலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் சென்னை பகுதி போலீஸ் நிலையங்களில் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சென்னை கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையத்தில் இருந்து இடமாறுதலாகி தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து அவர் கடந்த 1½ மாதத்துக்கு முன்பு தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும் தொடர்ந்து அவர் ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் குடியிருப்பிலேயே தொடர்ந்து குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
ஆறுமுகநேரியில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்ஸ்பெக்டர் மகளுக்கு காய்ச்சல்
இன்ஸ்பெக்டரின் மகள்கள் படிக்கும் பள்ளிக்கூடம் வீட்டில் இருந்து சுமார் ½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நிலையில் பள்ளிக்கூடத்துக்கு சென்ற இன்ஸ்பெக்டரின் மூத்த மகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். உடனடியாக பள்ளிக்கூட நிர்வாகத்தினர் உதவியாளர் ஒருவரை இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அவர் வீட்டுக்கு சென்று சி.பி.ஐ. அதிகாரி ஒருவரிடம் விவரத்தை தெரிவித்தார். பின்னர், இன்ஸ்பெக்டரின் மனைவி அகல்யாவை காய்ச்சல் மாத்திரையை எடுத்து கொண்டு, தங்களது காரில் பள்ளிக்கூடத்துக்கு சென்று வர அனுமதித்தனர். அதன்படி அவரும் பள்ளிக்கூடத்துக்கு சென்று மகளுக்கு மாத்திரை வழங்கி விட்டு வீட்டுக்கு வந்தார்.
ஓட்டலில் இருந்து உணவு
போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் சோதனை நடத்திய சி.பி.ஐ.அதிகாரிகள், ஆறுமுகநேரியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து உணவு மற்றும் குடிநீரை உதவியாளர் மூலம் வாங்கி வரச் செய்தனர். அதனை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் அவருடைய மனைவிக்கு வழங்கினர்.