தொழிலாளர்கள் பெயரில் கோடிக்கணக்கில் கடன் பெற்று மோசடி: பருப்பு மில் அதிபர்களுக்கு உடந்தையாக இருந்த வங்கி, அரசு அதிகாரிகள் யார்? போலீசார் தீவிர விசாரணை


தொழிலாளர்கள் பெயரில் கோடிக்கணக்கில் கடன் பெற்று மோசடி: பருப்பு மில் அதிபர்களுக்கு உடந்தையாக இருந்த  வங்கி, அரசு அதிகாரிகள் யார்? போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 5 Sep 2018 9:45 PM GMT (Updated: 5 Sep 2018 8:34 PM GMT)

விருதுநகரை சேர்ந்த பருப்பு மில் அதிபர்கள் தொழிலாளர்கள் பெயரில் கோடிக் கணக்கில் வங்கி கடன் பெற்று மோசடி செய்ததற்கு வங்கி மற்றும் அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுவதால் இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

விருதுநகர்,

விருதுநகரை சேர்ந்த பருப்பு மில் அதிபர்கள் வேல்முருகன் (வயது 65), செண்பகன் (55) ஆகிய இருவரும் பல தொழிலாளர்களுக்கு ஆயுள் காப்பீடு செய்வதாக கூறி அவர்களிடம் கையெழுத்து பெற்று அவர்களது பெயரில் பெரியகுளம், நிலக்கோட்டை, கோவில்பட்டி, விருதுநகர் உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள அரசு வங்கிகளில் கோடிக்கணக்கில் விளைபொருட்களுக்கான கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக தேனி மாவட்டம் தென்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின் அடிப்படையில் பருப்பு மில் அதிபர்கள் வேல்முருகன், செண்பகன் பருப்பு மில் ஊழியர் கலைச்செல்வி, இடைத்தரகர்கள் சோலைராஜ், சன்னாசி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் தொடர்புடையதாக கூறப்படும் செண்பகனின் மகள் இந்துமதி மற்றும் அவரது கணவர் விமல்குமார் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன்மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பெரியகுளம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், வத்தலகுண்டில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் சார்பில் வேல்முருகனுக்கும், செண்பகனுக்கும் விளை பொருட்களுக்கான கடன் வழங்கலாம் என்று இருப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதாவும், அதன் அடிப்படையில் வங்கி அதிகாரி ஒருவர் தொழிலாளர்களின் பெயரில் வங்கி கடன் பெற உதவியாக இருந்ததாகவும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. மேலும் சென்னை அடையாறை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும் இந்த பிரச்சினையில் தொடர்பு இருப்பதாக தெரியவந்ததன் அடிப்படையில் அது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

வங்கி கடன் பட்டியலில் பெயர் உள்ளதால் வங்கியில் இருந்து நோட்டீஸ் பெற்ற தொழிலாளர்கள் கூறுகையில், தாங்களை காரில் வங்கிக்கு காலை அழைத்து சென்று மாலையில் விருதுநகரில் கொண்டு வந்து விட்டுவிடுவார்கள் என்றும், அதற்குள் வங்கி கடன் அனுமதிக்கப்பட்டுவிடும் என்றும் தெரிவித்ததுடன் வங்கி கடன் வழங்குவதற்காக வங்கி கிளை அதிகாரிகள் சிலர் இரவு 10 மணி வரை வங்கியில் இருந்து வேலை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே போலீசார் இந்தஅளவுக்கு ஈடுபாட்டுடன் பருப்பு மில் அதிபர்களுக்கு அவர்கள் கொடுத்த கடன் விண்ணப்பங்களை முறையாக ஆய்வு செய்யாமல் உடனடியாக வங்கி கடன் அனுமதி வழங்கி உள்ளதால் அந்த அதிகாரிகள் யார்? யார்? என்பது பற்றி ஆவணங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விரைவில் இந்த அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதேபோல அரசு அதிகாரிகளும் இந்த கும்பலுக்கு துணை போயிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மில் அதிபர்களின் மோசடி வலையில் சிக்கி கடன் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஏழை தொழிலாளர்கள் பலர் குடும்பத்துடன் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விருதுநகர் பாலாஜி நகரை சேர்ந்த தொழிலாளி ஒருவர் பருப்பு மில் அதிபர்கள் கொடுத்த ரூ.1000 பணத்திற்காக அவர்களுக்கு தனது ஆதார் கார்டை கொடுத்துள்ளார். வங்கி கணக்கே இல்லாத தனக்கு ஒரே நாளில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டதாகவும், அதன் பின்னர் தனது வங்கி கணக்கில் ரூ.25 லட்சம் கடன் பாக்கியை கட்டுமாறு நோட்டீஸ் வந்ததாகவும் அவர் கூறியதுடன் இதனால் அதிர்ச்சி அடைந்து பருப்பு மில் அதிபர்களிடம் சென்று கேட்ட போது அவர்கள் போலீசில் புகார் செய்ததன் பேரில் தான் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதே போன்று மோசடியில் சிக்கி தொழிலாளர்களின் குடும்பத்தினர் சின்னா பின்னமாகி பரிதாப நிலைக்கு ஆளாகி உள்ளனர். தற்போது உள்ள நிலையில் வேறு வங்கிகளிலும் இம்மாதிரியான மோசடிகளை பருப்பு மில் அதிபர்கள் செய்துள்ளனரா? என்பது வெளிவராத நிலையில் உள்ளது. ஒரு வேளை அந்த வங்கி கிளைகளில் இருந்து மோசடி வலையில் சிக்கிய அப்பாவி தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் வந்தால் தான் இது பற்றிய விவரம் வெளிவர வாய்ப்பு உள்ளது. எது எப்படி இருந்தாலும் வங்கி அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு இருந்தால் இம்மாதிரியான மோசடி தவிர்க்கப்பட்டு இருப்பதுடன் அப்பாவி ஏழை தொழிலாளர்களின் வாழ்வும் பாழாகி இருக்காது.


Next Story