நம்பியூர் அருகே பரபரப்பு: அரசு பள்ளிக்கூடத்தை பெற்றோர் முற்றுகை


நம்பியூர் அருகே பரபரப்பு: அரசு பள்ளிக்கூடத்தை பெற்றோர் முற்றுகை
x
தினத்தந்தி 7 Sep 2018 10:45 PM GMT (Updated: 7 Sep 2018 2:11 PM GMT)

மாணவ–மாணவிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியதாக கூறி நம்பியூர் அருகே அரசு பள்ளிக்கூடத்தை பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நம்பியூர்,

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பேரூராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. எலத்தூர், நகமலை, தெற்குபதி, நாச்சிபாளையம், காந்திநகர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் இங்கு படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் மணிமேகலை மற்றும் 6 ஆசிரிய–ஆசிரியைகள் பணிபுரிகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று காலை 10 மணி அளவில் மாணவ–மாணவிகளின் பெற்றோர் 50–க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கூடத்தை திடீரென முற்றுகையிட்டார்கள். மேலும் தலைமை ஆசிரியரின் அலுவலக அறைக்கும் சென்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும், நம்பியூர் தாசில்தார் உமாமகேஸ்வரன், அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் பள்ளிக்கூடத்துக்கு சென்று, பெற்றோர்களிடம் விவரம் கேட்டார்கள். அப்போது பெற்றோர்கள் அதிகாரிகளிடம், ‘பள்ளிக்கூட வளாகத்தில் தண்ணீர் தேங்கும் இடங்களை மாணவ–மாணவிகளை வைத்து சுத்தம் செய்கிறார்கள்.

பிளீச்சிங் பவுடரை கைகளால் அள்ளி போடுவதால் மாணவ–மாணவிகளுக்கு உடல்நிலை பாதிக்கப்படுகிறது.

கடந்த மாதம் கட்டுரை போட்டியில் மாணவி ஒரு 1000 ரூபாய் ரொக்கப்பரிசு பெற்றார். அதை மாணவிக்கு வழங்கவில்லை. தமிழ் வகுப்பு எடுக்கும் தலைமை ஆசிரியை சரிவர வகுப்புக்கு செல்வதில்லை. எனவே அவரை இடமாற்றம் செய்யவேண்டும்‘ என்று புகார் கூறினார்கள்.

அதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் மணிமேகலையிடம் அதிகாரிகள் இதுபற்றி கேட்டனர். அதற்கு அவர், `எலத்தூர் பேரூராட்சி பணியாளர்களிடம் பள்ளிக்கூடத்துக்குள் தண்ணீர் தேங்கும் இடங்களை சுத்தம் செய்ய சொன்னோம். ஆனால் அவர்கள் செய்யவில்லை. அதனால் மாணவ–மாணவிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தினோம். இனிமேல் இதுபோல் செய்யமாட்டோம்.

கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற மாணவியிடம் 1000 ரூபாயை பள்ளியின் வளர்ச்சி நிதிக்கு செலவிடுவதாக கூறிவிட்டுத்தான் வைத்துக்கொண்டோம்`. என்றார்.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் எலத்தூர் பேரூராட்சியில் கூறி சுத்தம் செய்யும் பணியை செய்வதாகவும், தலைமை ஆசிரியர் மீது கூறப்பட்ட புகார்களை கல்வி அதிகாரிகளிடம் தெரிவிப்பதாகவும் பெற்றோர்களிடம் கூறினார்கள். அதை ஏற்றுக்கொண்ட பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story