ராமநாதபுரம் உச்சிப்புளி அருகே போதைப் பொருள் பதுக்கலா? 2 பேரிடம் போலீசார் விசாரணை
ராமநாதபுரம் உச்சிப்புளி அருகே போதைப்பொருள் பதுக்கப்பட்டதா என்ற சந்தேகத்தின்பேரில் 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் கியூ பிரிவு போலீசார் மற்றும் உச்சிப்புளி சட்டம்–ஒழுங்கு போலீசார் கடற்கரை பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன்வலசை பகுதியில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த புகாரின் பேரில் போலீசார் பிரப்பன்வலசையில் உள்ள ஒரு தனியார் இடத்தில் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு பாக்கெட்டில் இருந்த சுமார் 3 கிலோ எடையுள்ள பவுடரை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும் 500, 200, 100 கள்ள ரூபாய் நோட்டுகள் குவியலாக கிடந்தன.
இதுதொடர்பாக அந்த இடத்தில் பணியாற்றி கொண்டிருந்த நெச்சியூரணியை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன்கள் சிவசங்கர் (வயது 35), சிவகாந்தன்(23) ஆகியோரை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட 3 கிலோ பவுடர் போதைப் பொருளா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வுக்கு பின்னரே அது போதைப்பொருளா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் கிடந்த 70 எண்ணிக்கை கொண்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகளும், 59 எண்ணிக்கை கொண்ட 100 ரூபாய் கள்ள நோட்டுகளும், 67 எண்ணிக்கை கொண்ட 200 ரூபாய் கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.