எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தப்பட்ட ரூ.2 கோடி நகைகள் பறிமுதல்


எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தப்பட்ட ரூ.2 கோடி நகைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 8 Sept 2018 4:27 AM IST (Updated: 8 Sept 2018 4:27 AM IST)
t-max-icont-min-icon

சூரியநகரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தப்பட்ட ரூ.2 கோடி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பையில் இருந்து நேற்று முன்தினம் ஆமதாபாத் நோக்கி சூரிய நகரி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரெயிலில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதகர் டிக்கெட்டுகளை பரிசோதனை செய்து கொண்டிருந்தார்.

அப்போது ராஜஸ்தான் மாநிலம் ஜூனு மாவட்டத்தை சேர்ந்த எம்.கே.பன்வாரி என்ற பயணி அதிகளவு உடைமைகள் வைத்து இருந்ததை கண்டு அவர் அதற்காக அபராதம் செலுத்தும்படி கூறினார். ஆனால் அவர் அபராதம் செலுத்த மறுப்பு தெரிவித்து டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த டிக்கெட் பரிசோதகர் ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் ரெயில்வே போலீசார் அந்த ரெயிலில் ஏறி அவர் வைத்திருந்த உடைமைகளில் சோதனை செய்தனர்.

இச்சோதனையில் அவரது உடைமைகளில் ஏராளமான நகைகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த நகைகளுக்கான எந்த ஆவணமும் அவரிடம் இல்லை. இதையடுத்து போலீசார் அந்த நகைகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.2 கோடி என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் எம்.கே.பன்வாரியை கைது செய்தனர். அந்த நகைகளை அவர் குஜராத் மாநிலம் சூரத் நகருக்கு கொண்டு சென்று கொண்டிருந்ததாகவும், குறிப்பிட்ட நபர்களிடம் ஒப்படைத்தால் அதற்காக தனக்கு கமிஷன் கிடைக்க இருந்ததாகவும் தெரிவித்தார். போலீசார் அவர் மீது நகைகளை கடத்தியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயிலில் ரூ.2 கோடி நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story