தர்மபுரி: பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி - 7,500 பேர் பங்கேற்பு


தர்மபுரி: பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி - 7,500 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 9 Sept 2018 4:45 AM IST (Updated: 9 Sept 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் நடந்த பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 7,500 பேர் பங்கேற்றனர்.

தர்மபுரி,

தமிழகம் முழுவதும் வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக மாணவ-மாணவிகள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாநிலம் முழுவதும் பல்வேறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி ஸ்ரீவிஜய் வித்யாஸ்ரம் பள்ளி சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்போட்டி நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் இருந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை துணைபோலீஸ் சூப்பிரண்டு காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தநிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர்கள் டி.என்.சி.மணிவண்ணன், பள்ளி இயக்குனர்கள் தீபக் மணிவண்ணன், ஷரவந்தி தீபக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போட்டியில் மாணவ-மாணவிகள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என 7,500 பேர் கலந்து கொண்டு ஓடினார்கள்.

இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடியவர்கள் தர்மபுரி எஸ்.வி.ரோடு, பாரதிபுரம், இலக்கியம்பட்டி, செந்தில்நகர், அரசு மருத்துவமனை வழியாக மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தனர். போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த வீரர்களுக்கு சிறப்பு பரிசு, தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முதல் 250 இடங்களை பிடித்த போட்டியாளர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழும், அடுத்து வந்த 750 பேருக்கு வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற 7,500 பேருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த மாரத்தான் போட்டியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். அதிகாலை நடைபெற்ற இந்த போட்டியையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story