முழு அடைப்பு போராட்டம்: கூடலூரில் வாடகை கார், ஆட்டோக்கள் ஓடவில்லை, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது
முழு அடைப்பு போராட்டம் காரணமாக கூடலூரில் வாடகை கார், ஆட்டோக்கள் ஓடவில்லை. சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி,
நாடு முழுவதும் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதன்படி நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், சேரம்பாடி, கொளப்பள்ளி, மசினகுடி ஆகிய பகுதிகளில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால் அரசு அலுவலகங்கள், மருந்தகம் மற்றும் பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டன. வாடகை கார், ஆட்டோக்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. அரசு பஸ்கள் வழக்கம்போல் ஓடின. பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. தனியார் வாகனங்கள் இயக்கப்படாததால், கூடலூர் நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. ஆட்டோக்கள் ஓடாததால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ– மாணவிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
கூடலூர் நகரில் வெளியூரில் இருந்து வந்த வாகனங்களை காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வை சேர்ந்த சிலர் மறித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவலறிந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் வாகனங்களை மறித்த 9 பேரை கைது செய்தனர். இதற்கிடையே கைதானவர்களை விடுவிக்கக்கோரி பழைய பஸ் நிலையம் முன்பு சிலர் போலீஸ் வாகனத்தை மறித்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, கலைந்து சென்றனர்.
இதையடுத்து புதிய பஸ் நிலையம் அருகில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் அதை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் காங்கிரசை சேர்ந்த கே.பி.முகமது, அப்துல்ரகுமான், சுல்பீக்கர் அலி, தி.மு.க.வை சேர்ந்த ராஜேந்திரன், லியாகத் அலி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது தவிர கூடலூர் பஸ் நிலையம் அருகில் சாலை மறியல் நடந்தது. அதில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 46 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோத்தகிரியில் அரசு பஸ்கள் வழக்கம்போல் ஓடினாலும், மினி பஸ்கள் இயக்கப்படவில்லை. பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பஸ் நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் கைது செய்தனர்.