காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்


காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்
x
தினத்தந்தி 11 Sept 2018 3:00 AM IST (Updated: 11 Sept 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு அளித்தனர்.

திண்டுக்கல்,


திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். இதில் அனைத்துத்துறை முதன்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்தநிலையில் ஆத்தூர் அருகே உள்ள சங்காரெட்டிகோட்டையை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர்.

அதில், எங்கள் பகுதியில் சுமார் 60 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர், தடியன்குடிசை பகுதியில் உள்ள ஒரு எஸ்டேட்டில் கூலித்தொழிலாளர்களாக வேலை பார்த்து கொண்டு இருக்கிறோம். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாங்கள் எஸ்டேட்டில் வேலை செய்துகொண்டு இருந்தபோது, திடீரென ஒரு காட்டு யானை எஸ்டேட்டுக்குள் புகுந்தது. பின்னர் அது எங்களை விரட்ட தொடங்கியது. அதனிடம் இருந்து நாங்கள் தப்பி ஓடி உயிர் பிழைத்தோம். அந்த பகுதியில் யானையின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் எங்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
இதுகுறித்து வனத்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், எஸ்டேட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.

பழனி அருகே உள்ள பெரியஅம்மாப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணிக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஒரு சிலரை மட்டும் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 600 பேர் வசிக்கிறோம். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதியில் உள்ள பொதுப்பாதையை தான் பயன்படுத்தி வருகிறோம். தற்போது அந்த பாதையை தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். மேலும், அந்த வழியாக செல்ல அனுமதிப்பதில்லை. இதனால் வேலைக்கு செல்வோர், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியது இருக்கிறது. இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பொதுப்பாதையை மீட்டுத்தர வேண்டும், என்று கூறியிருந்தனர். 

Next Story