உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி கேட்டு முன்னாள் அமைச்சர் வழக்கு: போலீசார் பதில் அளிக்க, ஐகோர்ட்டு நோட்டீஸ்


உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி கேட்டு முன்னாள் அமைச்சர் வழக்கு: போலீசார் பதில் அளிக்க, ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 15 Sept 2018 3:15 AM IST (Updated: 15 Sept 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி கேட்டு முன்னாள் அமைச்சர் தொடர்ந்த வழக்கில் மனுதாரர் கோரிக்கை தொடர்பாக போலீசார் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

மதுரை,

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

கடந்த 2016–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். தற்போது தகுதிநீக்கம் செய்யப்பட்டு, இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் உள்ளது. 2016–ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தடுப்பணை கட்டுவது, தாலுகாக்களை பிரிப்பது, அரசு கலைக்கல்லூரி தொடங்குவது, குடிநீர் திட்டங்களை செயல்படுத்துவது போன்ற பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவதாக வாக்குறுதி அளித்தேன்.

அரவக்குறிச்சியில் மேற்கண்ட திட்டங்களை செயல்படுத்த மக்களின் பிரதிநிதியாக இருந்து குரல் கொடுத்து வருகிறேன். ஆனால் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை. இதையடுத்து திட்டங்களை நிறைவேற்றித்தர வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்தோம். அதன்படி வருகிற 20–ந்தேதி அன்றும், 25–ந்தேதி முதல் 27–ந்தேதி வரையும் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம், கே.பரமத்தி கடைவீதி, வேலாயுதம்பாளையம் ரவுண்டானா ஆகிய இடங்களில் போராட்டம் நடத்த சம்பந்தப்பட்ட போலீஸ்நிலையங்களில் அனுமதி கேட்டு மனு கொடுத்தோம். இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே நாங்கள் திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், மனுதாரர் கோரிக்கை தொடர்பாக போலீசார் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story