மத்திய அரசை கண்டித்து நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Sept 2018 4:00 AM IST (Updated: 15 Sept 2018 1:40 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்,

ரபேல் போர் விமான ஊழல் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ஷேக்நவீத் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் தனகோபால் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் சுபசோமு ஆர்ப்பாட்டத்திற்கான கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

இதில் ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ததில் மத்திய அரசு ஊழல் செய்து இருப்பதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். அதே போல் ராணுவ தளவாட பொருட்களை வாங்குவதற்கு அரசாங்கம் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டு உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.

இதற்கிடையே விமானங்களை வாங்கும் விலை தொடர்பாக மத்திய அரசிடம் வெளிப்படை தன்மை இல்லை என்றும், பாதுகாப்பிற்காக நாடாளுமன்ற குழுவிடம் பெற வேண்டிய ஒப்புதலும் பெறப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். அதேபோல் பிரதமர் மோடிக்கு நெருக்கமான நிறுவனம் என்பதற்காக முன்அனுபவம் இல்லாத ஒரு நிறுவனத்திற்கு ரூ.36 ஆயிரம் கோடி மதிப்பிலான போர் விமான உற்பத்தி ஒப்பந்தம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் பாச்சல் சீனிவாசன், ஜி.ஆர்.சுப்பிரமணி, வீரப்பன், நகர தலைவர் ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார். அதைத்தொடர்ந்து நாமக்கல் கலெக்டர் அலுவலகம் சென்று காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்தனர்.

Next Story