வைகோவின் ஆற்றல், தைரியம் தமிழ்நாட்டுக்கு தேவை - ம.தி.மு.க. மாநாட்டில் துரைமுருகன் பேச்சு


வைகோவின் ஆற்றல், தைரியம் தமிழ்நாட்டுக்கு தேவை - ம.தி.மு.க. மாநாட்டில் துரைமுருகன் பேச்சு
x
தினத்தந்தி 15 Sep 2018 11:30 PM GMT (Updated: 15 Sep 2018 12:57 PM GMT)

வைகோவின் ஆற்றல், அறிவு, தைரியம் தமிழ்நாட்டுக்கு தேவை என்று ம.தி.மு.க. மாநாட்டில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறினார்.

ஈரோடு,

ஈரோட்டில் நடந்த ம.தி.மு.க. மாநில மாநாட்டில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கலந்துகொண்டு முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்த விழாவில் என்னுடைய தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு இருக்க வேண்டும். ஆனால் விழுப்புரத்தில் தி.மு.க. சார்பில் நடைபெறுகிற விழாவில் கலந்துகொள்ள வேண்டிய காரணத்தால் அவரால் வர முடியவில்லை. அவருடைய பிரதிநிதியாக நான் கலந்து இருக்கிறேன். இதில் கலந்துகொண்டதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. தலைவர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்த வாய்ப்பு எனக்கு கிடைத்து இருக்கிறது. இன்னொரு மகிழ்ச்சியாக எனது 50 ஆண்டு கால நண்பனை வாழ்த்துகின்ற ஒரு வாய்ப்பு என இரு மகிழ்ச்சிகள் உள்ளன.

என்னுடைய தலைவர் கருணாநிதிதான் வைகோவுக்கும் தலைவர். அவரால் உருவாக்கப்பட்டவர்கள், அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் நாங்கள். அவர் அனைத்து துறைகளிலும் அறிவு ஜீவியாக இருந்தார். எனது நண்பர் வைகோவை பொறுத்த வரையில் நானும், வைகோவும் சட்டக்கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். கல்லூரி காலத்திலேயே நெருக்கமான நண்பர்கள். இன்று வரை அந்த நட்பு தொடர்கிறது. இடையில் கொஞ்ச காலம் ஊடலில் இருந்தபோதும் எங்களது நட்பின் ஊடல் கிடையாது. அரசியலில் மாறுபட்டு இருந்த காலத்தில் மேடைகளில் நான் அவரை வெளுத்து வாங்கி இருக்கிறேன். ஆனால் ஒருநாளும் அவர் என்னை ஒரு சொல் கூட சொன்னது கிடையாது.

அவர் ம.தி.மு.க. கட்சியை தொடங்கிய பின்னர் முதல் முதலாக கட்சி கொடி ஏற்ற வந்தது என்னுடைய தொகுதிதான். அப்போது எனக்கு எதிரானவர்கள் வைகோ எப்படியும் துரைமுருகனை பற்றி கடுமையாக பேசுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் 8 இடங்களில் கொடியேற்றிய அவர் துரை எப்படி இருக்கிறான்? என்று மட்டுமே தொண்டர்களிடம் கேட்டுவிட்டு வேறு எதுவும் பேசவில்லை. அவர் சென்ற பின்பு சிலர் என்னிடம் வந்து, உங்களுக்கும், வைகோவுக்கும் இடையில் என்ன தொடர்பு இருக்கிறது? என்று கேட்டார்கள். அதற்கு நான், உயிர் இருக்கும் வரை பிரியாத நட்பு இருக்கிறது என்று பதில் அளித்தேன்.

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது வைகோ பேசிக்கொண்டு இருக்கையில், பிரதமர் புறப்பட்டு சென்றார். அவரை பார்த்து, ஓடாதே நில்... என்று பாராளுமன்றத்தில் கூறியவர் வைகோ. பிரதமரை பார்த்து ஓடாதே நில் என்று சொல்லுகிற தைரியம் எவருக்கும் கிடையாது.

என் நண்பன் வைகோவின் அரைநூற்றாண்டு பொது வாழ்வில் எரிமலைகள் மீது நடந்து சென்ற காலம்தான் அதிகம். இளவேனில் காலத்தில் அவர் ஓய்வு எடுத்ததில்லை. எனவே நான் அவருக்கு கூறும் அறிவுரை என்னவென்றால், இனி வருகின்றன அரைநூற்றாண்டு வெற்று காலமாக சென்றுவிடக்கூடாது. இனம் பார்த்து சேர வேண்டும். களம் பார்த்து காலை வைக்க வேண்டும். வைகோவின் ஆற்றல், அறிவு, தைரியம் தமிழ்நாட்டுக்கு தேவையாகும்.

வைகோ வவுனியா காட்டுக்கு சென்றபோது அவர் கொடுத்த கடிதத்தை பார்த்து கலைஞர் கண்ணீர்விட்டு அழுதார். அவர் திரும்பி வந்துவிடுவார் தானே? என்று என்னை பார்த்து கேட்டு கண்ணீர் விட்டார். அதுபோல் திண்டுக்கல் மாநாட்டில் வைகோ என்னை இழந்தாரா? நான் வைகோவை இழந்தேனா? என்று கலைஞர் பேசும்போது, அவரும், வைகோவும் கண்ணீர்விட்டு அழுதனர்.

அரசியல் பாதைகளில் பிளவு என்பது தவிர்க்க முடியாது. பிளவுகள் இருந்தாலும், கொள்கையில் முரண்பாடு இருக்க கூடாது. நேர் எதிராக மோதுவது கூடாது. இப்போது அந்த நிலை மாறி இருக்கிறது. நீர் அடித்து நீர் விலகுவதில்லை. தியாகம் என்பது இருப்பதை இழப்பது. எதையும் எதிர்பாராமல் தியாகம் பல செய்தவர் வைகோ. அவருக்கு வளமான வாழ்க்கை உண்டு. நானும் அவரைபோல் பொது வாழ்வில் பொன்விழாவை கண்டவன். ஒரு பொன்விழாவை இன்னொரு பொன்விழா வாழ்த்துகிறது. என் நண்பன் வைகோவை உளமார உள்ளன்போடு வாழ்த்துகிறேன்.

இவ்வாறு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறினார்.


Next Story