கல்லணை அருகே சட்டவிரோதமாக பழமையான கருங்கற்கள் தோண்டி எடுக்கப்பட்டதாக வழக்கு: அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய, ஐகோர்ட்டு உத்தரவு


கல்லணை அருகே சட்டவிரோதமாக பழமையான கருங்கற்கள் தோண்டி எடுக்கப்பட்டதாக வழக்கு: அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 15 Sep 2018 10:45 PM GMT (Updated: 15 Sep 2018 7:58 PM GMT)

கல்லணை அருகில் சாலையில் கருங்கற்கள் சட்டவிரோதமாக தோண்டி எடுக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தற்போதைய நிலை பற்றி அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

திருச்சி மாவட்டம் மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்த சிவகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

காவிரி ஆற்றுப்பாசனத்தை பயன்படுத்தி எங்கள் பகுதியில் விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் ஊரில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கரிகாலசோழ மன்னரால் கட்டப்பட்ட கல்லணை உள்ளது. காவிரி ஆற்றில் பெருவெள்ளம் வந்தாலும் அணைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வண்ணம் திருச்சியில் இருந்து கல்லணைக்கு செல்லும் வழியில், அணைக்கு 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்னதாக உத்தமர்சீலி–கிளிக்கூடு பகுதிகளுக்கு இடையில் ஒரு தாழ்வான பகுதியை ஏற்படுத்தி, பழங்காலத்திலேயே கருங்கல் சாலை அமைத்துள்ளனர். கல்லணை கட்ட பயன்படுத்தப்பட்ட கருங்கற்களை வைத்து இந்த சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

ஆற்றில் அதிக வெள்ளம் வரும்போது தாழ்வான கருங்கல் சாலை வழியே தண்ணீர் வெளியேறும். அதேசமயம் நீர் அரிப்பால் மணல் வெளியேறி விவசாய நிலத்தில் குவிந்து விடாமலும் கருங்கல் சாலை தடுக்கும்.

இந்தநிலையில் கடந்த 2015–ம் ஆண்டு ரூ.35 கோடியில் சாலை அமைக்க காண்டிராக்டர் ஒருவருக்கு டெண்டர் விடப்பட்டது. அவர் சட்டவிரோதமாக கருங்கல் சாலையில் உள்ள கற்கள் அனைத்தையும் தோண்டி எடுத்துவிட்டு, அங்கு கான்கிரீட் சாலை அமைத்து உள்ளார்.

அந்த கற்களை சிறிய கற்களாக உடைத்து கட்டுமானப்பணிகளுக்கு பயன்படுத்தி உள்ளார். கருங்கல் ஒவ்வொன்றும் பல டன் எடை உள்ளது. இதுபற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அப்போதே கொள்ளிடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து உள்ளார். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தான் கருங்கல் சாலையை அப்போதே அமைத்துள்ளனர். தற்போது இந்த கற்கள் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டு உள்ளதால், அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பழமைவாய்ந்த கொள்ளிடம் ஆற்றுப்பாலம், சட்டவிரோத மணல் கொள்ளையால் வலிமையிழந்து உடைந்தது. இதுபோன்ற பாதிப்பை கல்லணை சந்திக்காமல் இருக்க, மீண்டும் அதே இடத்தில் கருங்கற்களை பதிக்க உத்தரவிட வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், கருங்கல் சாலை பற்றிய தற்போதைய நிலை குறித்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, திருச்சி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story