கோ-ஆப்டெக்சிற்கு தீபாவளி சிறப்பு விற்பனை இலக்காக ரூ.1 கோடியே 18 லட்சம் நிர்ணயம்


கோ-ஆப்டெக்சிற்கு தீபாவளி சிறப்பு விற்பனை இலக்காக ரூ.1 கோடியே 18 லட்சம் நிர்ணயம்
x
தினத்தந்தி 17 Sept 2018 3:24 AM IST (Updated: 17 Sept 2018 3:24 AM IST)
t-max-icont-min-icon

கோ-ஆப்டெக்சிற்கு தீபாவளி சிறப்பு விற்பனை இலக்காக ரூ.1 கோடியே 18 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கணேஷ் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்பு விற்பனையின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, விற்பனையை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 83 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு பேருதவி புரிந்து வருகிறது. காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளைக் கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் கோ-ஆப்டெக்ஸ் சேலைகள் மற்றும் இதர ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது, தமிழக அரசு வழங்கும் 30 சதவீத தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், ஆயத்த ஆடைகள், திரைச்சீலைகள் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப் பட்டுள்ளன.

தீபாவளி சிறப்பு விற்பனையின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் கடந்த ஆண்டு ரூ.94 லட்சத்து 79 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டது. தற்போதைய இலக்கு ரூ.1 கோடியே 18 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் கோ-ஆப்டெக்சில் தங்களுக்கு தேவையான துணிகள் வாங்கி நெசவாளர் முன்னேற்றத்திற்கு துணை புரிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் மாணிக்கம், மேலாளர்கள் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) சீனிவாசன், சரவணன் (தணிக்கை), துணை மண்டல மேலாளர் அன்பழகன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜீவாசுப்பிரமணியன், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story