மாவட்ட செய்திகள்

மதமாற்றத்தை தடுத்து நிறுத்தி ஒன்றுபட்ட இந்து சக்தியாக திகழ வேண்டும் + "||" + To stop the conversion and become a united Hindu force

மதமாற்றத்தை தடுத்து நிறுத்தி ஒன்றுபட்ட இந்து சக்தியாக திகழ வேண்டும்

மதமாற்றத்தை தடுத்து நிறுத்தி ஒன்றுபட்ட இந்து சக்தியாக திகழ வேண்டும்
கடத்தப்பட்ட கோவில் சிலைகளை அரசால் மீட்க முடியவில்லை என்றும், மதமாற்றத்தை தடுத்து நிறுத்தி ஒன்றுபட்ட இந்து சக்தியாக திகழ வேண்டும் என்றும் வேடசந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் எச்.ராஜா பேசினார்.
வேடசந்தூர்,

இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் வேடசந்தூரில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

வடமாநிலங்களில் கொண்டாடப்படுகிற துர்கா பூஜையை போல, தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்திய அளவில், 4 சக்திகள் ஒருங்கிணைந்து இந்து ஒற்றுமைக்கு மாறாக செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக இடதுசாரிகள், பிரிவினைவாதிகள், நக்சல்கள் உள்ளிட்டோர் இணைந்து செயல்படுகின்றனர்.

தூத்துக்குடியில் நடந்த கலவரத்துக்கு, மக்கள் அதிகாரம் என்ற அமைப்பினரின் பங்களிப்பு முக்கியமானதாகும். இதேபோல் ஹைட்ரோ கார்பன் திட்டம், எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக பிரச்சினைகளை தூண்டி விடுகின்றனர். விநாயகர் சிலை ஊர்வலத்தில் சிலர் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர். ஆனால் 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய விநாயகர் உருவம், தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.
தமிழகத்தில் சீமான், திருமுருகன் காந்தி போன்றோர் இந்துக்களுக்கு எதிரான கருத்தையே புகுத்தி வருகின்றனர். மே-17 என்ற பெயரில் ஒரு இயக்கம். அது, 2009-ம் ஆண்டு மே மாதம் 17-ந்தேதி பிரபாகரன் இறந்ததை வைத்து தொடங்கப்பட்டதாகும்.

கடந்த 2003-ம் ஆண்டில் நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது, திருவண்ணாமலையில் இடும்பன் கோவில் காணாமல் போய் விட்டதாக சட்டமன்றத்தில் பேசினேன். அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, இது தவறான செய்தி என்றார். அதன்பிறகு விசாரித்துவிட்டு கோவில் காணாமல் போய் இருந்ததை அறிந்து ஆக்கிரமிப்பை அகற்றி கோவில் கட்ட உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால் அவரது உத்தரவு செயல்பாட்டுக்கு வரவில்லை. இதேபோல் தீனதயாளன் என்ற பெரியவர், சிலருடன் கூட்டு சேர்ந்து பல்வேறு சிலைகளை கடத்தினார். அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர் போன்ற இடங்களில் விலை மதிப்புமிக்க தமிழக கோவில்களின் சிலைகள் உள்ளன. ஆனால் அந்த சிலைகளை அரசால் மீட்க முடியவில்லை.

இதுபற்றி கேட்டால், எந்த கோவில் சிலை என தெரியவில்லை என்கின்றனர். இது ஆமை புகுந்த வீடும், அரசாங்கம் புகுந்த கோவிலும் விளங்கியதாக சரித்திரம் இல்லை என்ற பழமொழி சொல்வதை போல உள்ளது.
இதேபோல் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை பிற மதத்தினருக்கு வழிபாட்டு தலங்கள் கட்டுவதற்கு ஒதுக்கி கொடுத்துள்ளனர். இது, வீட்டு பெண்களை விலைக்கு விற்பதற்கு சமமானது. எனவே நாம் அனைவரும் மத மாற்றத்தை தடுத்து நிறுத்தி, ஒன்றுபட்ட உணர்வு சக்தியாக, இந்து சக்தியாக திகழ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மாவட்ட துணைத்தலைவர் விபூசனன் வரவேற்றார். இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்குமார், வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஜோதிமுருகன், வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் செல்வக்குமார் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.