கோபி அருகே விவசாயியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
கோபி அருகே விவசாயியை வெட்டி கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கடத்தூர்,
கோபி அருகேயுள்ள செம்மாம்பாளையம் வெள்ளியங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (45). விவசாயி. இவருக்கும், இவருடைய உறவினரான திருப்பூர் மாவட்டம் குட்டகத்தை சேர்ந்த சதீஷ்குமார் (25) என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20–ந் தேதி இரவு பழனிச்சாமி தன்னுடைய தோட்டத்து வீட்டில் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ்குமார் அரிவாளால் பழனிச்சாமியை வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. அதை தடுக்க வந்த பழனிச்சாமியின் மகன் துரைசாமியையும், அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
இந்த சம்பவம் குறித்து வரப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோபி 3–வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி மணி நேற்று தீர்ப்பு கூறினார். அதில், பழனிச்சாமியை கொலை செய்த குற்றத்துக்காக சதீஷ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தனகோட்டிராம் ஆஜரானார்.