கோவில் திருவிழாவில் நகைப்பறிப்பில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது
பாந்திரா மலை மாதா கோவில் திருவிழாவில் நகைப்பறிப்பில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
மும்பை பாந்திராவில் மலை மாதா கோவில் உள்ளது. இந்த கோவிலில் 8 நாள் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிந்தது. கடைசி நாள் திருவிழா அன்று உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் மலை மாதா கோவிலுக்கு வந்தனர். இதில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 41 வயது பெண் மற்றும் 64 வயது மூதாட்டியிடம் மா்மநபர்கள் தங்க சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றனர்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் பாந்திரா போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 3 பெண்கள் நகைப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை தேடிவந்தனர்.
இந்தநிலையில் நகைப்பறிப்பில் ஈடுபட்ட பெண்கள் மலை மாதா கோவில் அருகே சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.விசாரணையில், நகைப்பறிப்பில் ஈடுபட்ட பெண்கள் தமிழ்நாட்டை சேர்ந்த ராதியா ராஜேந்திரன் (37), நதியா வாசுதேவன் (35), பன்டேஸ்வரி ராஜமுத்து (24) ஆவர். இவர்கள் மலை மாதா கோவில் திருவிழாவிற்கு வருபவர்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட கடந்த சில நாட்களுக்கு முன் தான் தமிழகத்தில் இருந்து மும்பை வந்துள்ளனர்.
இவர்கள் கோவிலுக்கு தனியாக வந்த பெண்களின் கவனத்தை திசை திருப்பி நகைப்பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.