எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் தீவிரம் - தளவாய்சுந்தரம் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் தீவிரம் - தளவாய்சுந்தரம் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை
x
தினத்தந்தி 18 Sep 2018 11:29 PM GMT (Updated: 18 Sep 2018 11:29 PM GMT)

நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் 22-ந் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இது குறித்து தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

குமரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை) நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. விழாவுக்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்குகிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலை வகிக்கிறார். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்று பேசுகிறார்.

மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், விஜயகுமார் எம்.பி. ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர். உருவப்படத்தை திறந்து வைக்கிறார். சுமார் 20 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இது மட்டும் அல்லாது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாரத்தான் உள்பட பல போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசுகள் வழங்கி பேசுகிறார்.

விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதுதவிர குமரி மாவட்ட அ.தி.மு.க.வினரும் 5 இடங்களில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.

ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் பந்தல் மற்றும் விழா மேடை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அரசின் பல்வேறு துறை சார்பில் கண்காட்சி அரங்குகள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை அரசுத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகின்றனர். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரமும் தினமும் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தமிழக அரசின் புதுடெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமை தாங்கினார். கலெக்டர் பிரசாந்த் வடநேரே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நூற்றாண்டு விழா நடைபெறும் இடத்தில் அரசுத்துறைகள் சார்பில் அமைக்கப்பட உள்ள கண்காட்சி அரங்குகள், முக்கிய பிரமுகர்கள் அமருவதற்கு இருக்கை வசதிகள் மேற்கொள்வது, வாகனங்கள் நிறுத்தும் இடங்களை ஒழுங்குபடுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாகவும் விரிவாகப் பேசப்பட்டது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும், விழாவை சிறப்பாக நடத்தவும் ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ராகுல்நாத், முன்னாள் செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குனர் தாணப்பா ஆகியோர் பங்கேற்றனர். மேலும் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன், மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கிருஷ்ணகுமார் உள்பட பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Next Story