வீடு, பொது இடங்களில் தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும் பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்


வீடு, பொது இடங்களில் தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும் பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 18 Sep 2018 11:36 PM GMT (Updated: 18 Sep 2018 11:36 PM GMT)

வீடு, பொது இடங்களில் தூய்மையை கடைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு கலெக்டர் கணேஷ் அறிவுறுத்தினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் ‘தூய்மையே சேவை“ என்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, உறுதிமொழியை வாசிக்க அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அதனை திரும்ப கூறி உறுதிமொழி எடுத்து கொண்டனர். அதனை தொடர்ந்து கலெக்டர் கணேஷ் பேசும்போது கூறியதாவது:- மாவட்டத்தில் உள்ள 1,770 அங்கன்வாடி மையங்கள், 70 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 111 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 103 அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் தூய்மையின் முக்கியத்துவம் குறித்து தேவையான விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தூய்மை பாரத சேவையில் நமது வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், நீர் நிலைகள் மற்றும் இதர பொது இடங்களில் தூய்மையை கடைபிடிக்க வேண்டும்.

வீடுகளில் இரட்டை உறிஞ்சு குழிகளுடன் கூடிய கழிப்பறைகளை கட்டுவதுடன், அவ்வாறு கழிப்பறைகள் கட்டாதவர்களையும் கழிப்பறைகள் கட்ட செய்து, திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற கிராமங்களையும், நகரங்களையும் உருவாக்குவோம். கழிப்பறைகளை பயன்படுத்துவதுடன், கை, கால்களை சுத்தமாக கழுவுதல் மற்றும் இதர சுகாதார பழக்கங்களையும் கடைபிடிக்க வேண்டும். “குறைத்தல், மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாடு“ என்ற கோட்பாட்டின் படி திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை திட்டத்தினை பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவோம். குறிப்பாக பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தூய்மையின் முக்கியத்துவம் குறித்து வளரும் பருவத்திலேயே அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பரணிதரன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story