பான்பராக், குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்றால் நடவடிக்கை, போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
பான்பராக், குட்கா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு மாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை நகர பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுவையில் பான்பராக், குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சிலர் மறைமுகமாக வைத்து இந்த பொருட்களை விற்பனை செய்து வருவதாக புகார்கள் வருகின்றன. 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு போதைப்பொருட்களை விற்றால் அது பெரும் குற்றமாகும். எனவே கடைகளில் யாராவது போதைப்பொருட்கள் விற்பனை செய்து வந்தால் அதனை உடனடியாக அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும்.
போலீசாரும், உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகளும் வந்து ஆய்வு செய்யும் போது உங்கள் கடைகளில் ஏதாவது ஒரு பாக்கெட் போதைப்போருள் இருந்தாலும் அவர்கள் குற்றவாளிகளாகவே கருதப்படுவார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நாளை(வியாழக்கிழமை) முதல் போலீசாரும், அதிகாரிகளும் ஒவ்வொரு கடைகளாக சென்று ஆய்வு மேற்கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.