நாமக்கல், திருச்செங்கோடு கோ-ஆப்டெக்சில் ரூ.80 லட்சத்துக்கு ஜவுளி விற்பனை செய்ய இலக்கு - கலெக்டர் ஆசியா மரியம் தகவல்


நாமக்கல், திருச்செங்கோடு கோ-ஆப்டெக்சில் ரூ.80 லட்சத்துக்கு ஜவுளி விற்பனை செய்ய இலக்கு - கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
x
தினத்தந்தி 20 Sept 2018 5:00 AM IST (Updated: 20 Sept 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல், திருச்செங்கோடு கோ-ஆப்டெக்சில் ரூ.80 லட்சத்துக்கு ஜவுளி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் தகவல் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்,

தீபாவளியை முன்னிட்டு நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் ரூ.80 லட்சத்துக்கு ஜவுளி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் கூறினார்.

நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவில் அருகில் செயல்பட்டுவரும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் நேற்று தீபாவளி சிறப்பு ஜவுளி விற்பனை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் கலந்து கொண்டு, சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். முதல் விற்பனையை ஆசிரியை மங்களகவுரி பெற்றுக் கொண்டார்.

பின்னர் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு உள்ள புதிய ரக பட்டு புடவைகள் மற்றும் கைத்தறி புடவைகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள் போன்றவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து விடுமுறை நாட்களிலும் நாமக்கல், திருச்செங்கோடு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் செயல்படும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு நாமக்கல் கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு ரூ.70 லட்சமும், திருச்செங்கோடு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு ரூ.10 லட்சமும் என மொத்தம் நாமக்கல் மாவட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களின் இலக்கு ரூ.80 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மேலும் தீபாவளி சிறப்பு தள்ளுபடியாக அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வட்டியில்லா கடன் வசதியுடன் 30 சதவீதம் வரையிலான தள்ளுபடியில் பட்டு மற்றும் அனைத்து ரக துணிரகங்கள் வழங்கப்படுகிறது. பட்டிற்கான தர முத்திரை பதித்த கோ-ஆப் டெக்ஸ் பட்டுப்புடவைகளை தீபாவளி பண்டிகை காலத்தில் 30 சதவீத தள்ளுபடியில் வாங்கி பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சேலம் கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) குணசேகரன், நாமக்கல் விற்பனை நிலைய மேலாளர் செல்வாம்பாள், உள்பட கோ-ஆப்டெக்ஸ் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story