ஒட்டன்சத்திரத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி


ஒட்டன்சத்திரத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி
x
தினத்தந்தி 21 Sept 2018 3:15 AM IST (Updated: 20 Sept 2018 11:16 PM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி செய்ததாக தனியார் நிதிநிறுவனம் மீது பாதிக்கப்பட்ட மக்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

திண்டுக்கல், 

ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஈஸ்வரன், ராமமூர்த்தி, முத்துலட்சுமி உள்பட 15 பேர், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் ஏலச்சீட்டு நடத்தி தனியார் நிதிநிறுவனம் மோசடி செய்து விட்டதால், பணத்தை மீட்டு தரும்படி மனு கொடுத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

கோவையை தலைமையிடமாக கொண்டு ஒட்டன்சத்திரத்தில் ஒரு தனியார் நிதிநிறுவனத்தின் கிளை செயல்பட்டது. அந்த நிறுவனத்தில் தினசரி ஏலச்சீட்டு நடத்தினர். தினமும் ரூ.40 முதல் ரூ.1,300 வரை செலுத்தலாம். இதில் 20, 25 மாதங்கள் செலுத்தும் சீட்டுகள் உள்ளதாக கூறினர். இதையடுத்து ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்த நிறுவனத்தில் ஏலச்சீட்டில் சேர்ந்தனர்.

ஒவ்வொரு நபரும் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் அதிகமாக ரூ.5 லட்சம் வரை செலுத்தி இருக்கிறோம். அந்த வகையில் சுமார் ரூ.3 கோடி வரை பணம் செலுத்தி உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த நிதிநிறுவனம் திடீரென மூடப்பட்டு விட்டது. இதனால் பணம் செலுத்திய அனைவரும் ஏமாற்றம் அடைந்தோம்.

இதுகுறித்து நிதிநிறுவனத்தின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது முறையாக பதில் அளிக்கவில்லை. ஏலச்சீட்டு நடத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை மோசடி செய்துள்ளனர். இதனால் பணத்தை இழந்த அனைவரும் விரக்தி அடைந்துள்ளோம். எங்களுடைய பணத்தை மீட்டு தர போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 
1 More update

Next Story