2½ வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளிக்கு 50 ஆண்டு சிறை தண்டனை


2½ வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளிக்கு 50 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 20 Sep 2018 9:45 PM GMT (Updated: 21 Sep 2018 12:35 AM GMT)

2½ வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளிக்கு 50 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இது பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர்,


கடலூர் மாவட்டம் ஒரத்தூர் அருகே உள்ள மதுராந்தகநல்லூர் பெரிய தெருவைச்சேர்ந்த மருதமுத்து என்பவரது மகன் பழனிசாமி(வயது33). இவர் கிள்ளை அருகே உள்ள தீர்த்தாம்பாளையத்தைச்சேர்ந்த கொத்தனார் ஒருவரிடம் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்தார்.

கட்டிட வேலைக்கு செல்வதற்காக சம்பவத்துக்கு முன்தினம் இரவில் இவர் கொத்தனாரின் வீட்டுக்கு சென்று தங்கினார். அவரை திண்ணையில் படுக்க சொல்லி விட்டு, கொத்தனார் தனது மனைவி மற்றும் 2½ வயது குழந்தையுடன் வீட்டுக்குள் படுத்து தூங்கினார். வீட்டுக்கு வெளியேயுள்ள திண்ணையில் பழனிசாமி படுத்து இருந்ததால், வீட்டின் கதவை கொத்தனார் பூட்டவில்லை.
அதிகாலை 4 மணி அளவில் அவர் எழுந்த போது, அவரது அருகில் படுத்திருந்த குழந்தையை காணாமல் திடுக்கிட்டார். உடனே அவர் வீட்டுக்கு வெளியே சென்று பார்த்த போது திண்ணையில் படுத்திருந்த பழனிசாமியையும் காணவில்லை.

இதனால் வீட்டை சுற்றி தேடிப்பார்த்தார். அப்போது அருகே உள்ள கரும்பு தோட்டத்துக்குள் குழந்தையின் முனகல் சந்தம் மட்டும் கேட்டுக்கொண்டு இருந்தது. உடனே அவர் அங்கு சென்று பார்த்தபோது, அவரது குழந்தையை பழனிசாமி பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருந்ததை பார்த்து திடுக்கிட்டார். கொத்தனார் வந்ததை பார்த்ததும் பழனிசாமி தப்பி ஓடிவிட்டார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11-ந்தேதி இந்த சம்பவம் நடந்தது.
இது பற்றி சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொத்தனாரின் மனைவி புகார் செய்தார். அதன் பேரில் பழனிசாமி மீது போக்சோ சட்டப்பிரிவு 6 மற்றும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 450-ன் கீழ் இன்ஸ்பெக்டர் உஷா வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தார்.

கடலூர் மகளிர் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததைத்தொடர்ந்து நீதிபதி டி.லிங்கேஸ்வரன் நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக போக்சோ சட்டத்தின் கீழ் பழனிசாமிக்கு 50 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும் கொத்தனாரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து குழந்தையை தூக்கிச்சென்ற குற்றத்துக்காக இந்திய தண்டனை சட்டப்பிரிவு 450-ன் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

சிறை தண்டனையை பழனிசாமி ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். பரபரப்பான இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் க.செல்வபிரியா ஆஜராகி வாதாடினார். 

Next Story