மாவட்ட செய்திகள்

செல்போனை பறித்துவிட்டு தப்பிச்சென்றபோது விபத்தில் சிக்கி கொள்ளையன் பலி; லாரி டிரைவர் அடித்துக்கொலை + "||" + Take away the cellphone Escape The robber stuck in an accident Larry Driver beat and kill

செல்போனை பறித்துவிட்டு தப்பிச்சென்றபோது விபத்தில் சிக்கி கொள்ளையன் பலி; லாரி டிரைவர் அடித்துக்கொலை

செல்போனை பறித்துவிட்டு தப்பிச்சென்றபோது விபத்தில் சிக்கி கொள்ளையன் பலி; லாரி டிரைவர் அடித்துக்கொலை
லாரி டிரைவரிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பிச்சென்றபோது மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த கொள்ளையன், மற்றொரு லாரி சக்கரத்தில் சிக்கி பலியானார்.
செங்குன்றம்,

ஆத்திரத்தில் அந்த லாரி டிரைவரை அடித்துக்கொன்ற சக கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அம்பத்தூர் புதூர் திருமலைபிரியாநகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் வீராங்கன் (வயது 45). லாரி டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு தான் ஓட்டிவந்த லாரியை மாதவரம் பால்பண்ணை மஞ்சம்பாக்கம் சாலையில் நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.


அப்போது சென்னை வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவைச் சேர்ந்த பழனி என்பவருடைய மகன் சுகுமார் (19) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் என 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். திடீரென அவர்கள், வீராங்கனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்தனர்.

அதிர்ச்சி அடைந்த வீராங்கன், ‘திருடன் திருடன்’ என கூச்சலிட்டார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்ததால், அவர்களிடம் சிக்காமல் இருக்க கொள்ளையர்கள் 3 பேரும், மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.

மஞ்சம்பாக்கம் 200 அடி சாலையில் அவர்கள் வேகமாக சென்றபோது, திடீரென நிலைதடுமாறி 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி சாலையில் விழுந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் மணலியில் இருந்து இரும்புலோடு ஏற்றிவந்த லாரி, கொள்ளையன் சுகுமார் மீது ஏறி இறங்கியது.

லாரி சக்கரத்தில் சிக்கிய சுகுமார், அதே இடத்தில் உடல் நசுங்கி இறந்தார். சக கொள்ளையர்கள் இருவரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கொள்ளையர்கள் 3 பேரும் அப்போது மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

சுகுமார் பலியானதால் ஆத்திரம் அடைந்த சக கொள்ளையர்கள் இருவரும், சுகுமாரின் உயிரை பறித்த லாரியின் டிரைவரான வேலூர் மாவட்டம் ஆற்காடு எசையனூர் கிராமத்தைச் சேர்ந்த மணி (50) என்பவரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதில் படுகாயம் அடைந்த டிரைவர் மணி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார், விபத்தில் பலியான கொள்ளையன் சுகுமார் மற்றும் அடித்துக்கொலை செய்யப்பட்ட லாரி டிரைவர் மணி ஆகிய இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக மாதவரம் பால்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சக கொள்ளையர்களான 17 வயது சிறுவர்கள் இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் திருவொற்றியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

விபத்தில் பலியான சுகுமார் மீது செங்குன்றம், மாதவரம், கொடுங்கையூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கைதான 17 வயது சிறுவர்களில் ஒருவர், பலியான சுகுமாருக்கு தம்பி ஆவார். மற்றொருவர் நண்பர் ஆவார்.


அதிகம் வாசிக்கப்பட்டவை