ஆட்கள் வைத்து அதிகாரிகளை கண்காணித்து ஆற்றில் மணல் கொள்ளை
திருமங்கலம் பகுதியில் ஆட்கள் வைத்து அதிகாரிகளை கண்காணித்து ஆற்றில் மணல் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது. இதை தடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமங்கலம்,
திருமங்கலம் பகுதியில் உள்ள கவுண்டமா ஆற்றில் உள்ள மணல் வளத்தை மணல் கொள்ளையார்கள் தொடர்ந்து நள்ளிரவு நேரங்களில் அள்ளி விற்பனை செய்கிறார்கள். கவுண்டமா ஆறு சவுடார்பட்டி பகுதியில் இருந்து நடுவக்கோட்டை, அச்சம்பட்டி, ராயபாளையம் வரை சென்று குண்டாறு பகுதியில் இணைகிறது. இந்த பகுதியில் மழை வெள்ளத்தால் மணல் நிறைந்து காணப்பட்டது.
தற்போது இங்கு எந்திரம் மூலம் நள்ளிரவு நேரங்களில் டிப்பர் மற்றும் மினி லாரிகள் மூலம் ஆட்களை கொண்டு இரவோடுஇரவாக மணலை அள்ளி விற்பனை செய்கிறார்கள். அதிகாரிகள் வந்தால் அவர்களை கண்காணிக்க 5–க்கும் மேற்பட்ட ஆட்களை கொண்டு பல்வேறு இடங்களில் நிற்க வைத்து செல்போனில் தகவல் கொடுத்து தப்பித்து வருகின்றனர்.
மேலும் அதிகாரிகள் சோதனை செய்ய வந்தால் மணலை கொட்டிவிட்டு டிப்பர் லாரியுடன் சீமைக்கருவேல மரப்பகுதியில் மறைந்து கொள்கின்றனர். இந்த நிலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. அதிகாரிகள் பல முறை லாரியை பிடித்து அபராதம் விதித்தாலும் வெளியே வந்த சில நாட்களில் மீண்டும் மணல் கொள்ளையர்கள் திருட ஆரம்பிக்கின்றனர்.
இந்த ஆற்றால் பயன்பெறும் கண்மாய்கள் மற்றும் குடிநீர் ஆழ்குழாய்கள் அதிகஅளவில் உள்ளன. மணல் அள்ளுவதால் இவைகளின் நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது மணல் திருடுவதற்காக 100–க்கும் மேற்பட்ட பனை மரங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறியதாவது:– ஆற்றின் அருகே உள்ள புறம்போக்கு நிலங்களையும் மணல் கொள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை. புறம்போக்கு நிலங்களை அனுபவிப்பவர்களிடம் குறைந்த அளவு பணம் கொடுத்து மணலை திருடி விற்கின்றனர். இதனை தடுக்க வேண்டும். அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.