ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சி - வைகோ குற்றச்சாட்டு


ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சி - வைகோ குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 21 Sep 2018 11:45 PM GMT (Updated: 21 Sep 2018 7:29 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சி நடப்பதாக வைகோ குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

மதுரை,

சென்னையில் இருந்து விமானம் மூலம் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தமிழக அரசு, கொள்கை அளவில் முடிவு எடுத்து சட்டமன்றத்தில் சட்ட திருத்தமாக நிறைவேற்றி இருக்க வேண்டும். அப்படி சட்ட திருத்தம் நிறைவேற்றி இருந்தால் ஆலையை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்காது. தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது. இதன் மூலம், மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கான முயற்சிகள் நடக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால், தற்போது மக்கள் போராட்டமாக இருக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், அரசியல் கட்சிகளின் ஒரு மித்த போராட்டமாக மாற வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து தமிழக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை என வைகோ கூறியுள்ளார். அவர், மனதில் தோன்றியதை கூறுகிறார். ஸ்டெர்லைட் விவாகரத்தில் அரசு முறையாக செயல்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலை விவாகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அதை மேற்கொண்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.


Next Story