விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குதிரையாறு அணையில் தண்ணீர் திறப்பு


விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குதிரையாறு அணையில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 21 Sep 2018 10:30 PM GMT (Updated: 21 Sep 2018 10:05 PM GMT)

விவசாயத்துக்காக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்ததன் எதிரொலியாக குதிரையாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

நெய்க்காரப்பட்டி, 

பழனி, நெய்க்காரப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நெல், மக்காச்சோளம் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், சாகுபடிக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததாலும் பயிர்கள் கருக தொடங்கின. இதையடுத்து தண்ணீர் இன்றி கரும் பயிர்களை காப்பாற்ற பழனி குதிரையாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதன் பலனாக குதிரையாறு அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடும்படி பொதுப்பணித்துறையினருக்கு முதல்- அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி நேற்று முதல் அணையில் இருந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீரை திறந்துவிட்டனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, குதிரையாறு அணையின் மொத்த உயரமான 80 அடியில் தற்போது 44.66 அடி வரை தண்ணீர் உள்ளது. இதில், முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி விவசாய பாசனத்துக்காக அணையில் இருந்து வினாடிக்கு 16 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இன்று (அதாவது நேற்று) முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 12-ந்தேதி வரை 21 நாட்கள் தண்ணீர் திறந்துவிடப்படும். இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 600 ஏக்கரிலும், திருப்பூர் மாவட்டத்தில் 400 ஏக்கரிலும் பயிரிடப்பட்ட பயிர்கள், தண்ணீர் இன்றி வாடாமல் விவசாயிகள் காப்பாற்றிக்கொள்ள முடியும். பிரதான மதகின் கீழ் உள்ள சிறிய அளவிலான மதகு மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது என்றனர். 

Next Story