கவர்னர் வஜூபாய் வாலாவிடம் பா.ஜனதா தலைவர்கள் மனு


கவர்னர் வஜூபாய் வாலாவிடம் பா.ஜனதா தலைவர்கள் மனு
x
தினத்தந்தி 21 Sep 2018 11:31 PM GMT (Updated: 21 Sep 2018 11:31 PM GMT)

சட்டம்–ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் மக்கள் போராட அழைப்பு விடுத்த முதல்–மந்திரி குமாரசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னர் வஜூபாய் வாலாவிடம் பா.ஜனதா தலைவர்கள் மனு கொடுத்து உள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணி கட்சிகளை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அவர்களை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யும் பா.ஜனதாவுக்கு எதிராக மக்கள் திரண்டு வந்து போராடுமாறு முதல்–மந்திரி குமாரசாமி அழைப்பு விடுத்தார். இதை பா.ஜனதா கண்டித்துள்ளது. குமாரசாமியை கண்டித்து பா.ஜனதா சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து மத்திய மந்திரி சதானந்தகவுடா தலைமையில் பா.ஜனதா தலைவர்கள் நேற்று மாலை பெங்களூரு ராஜ்பவனில் கவர்னர் வஜூபாய் வாலாவை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அதில், கர்நாடக முதல்–மந்திரி, சட்டம்–ஒழுங்கை கெடுக்கும் நோக்கத்தில் எதிர்க்கட்சிக்கு எதிராக மக்கள் வீதிக்கு வந்து போராடுமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதன்பேரில் எதிர்க்கட்சி தலைவரின் வீட்டை காங்கிரசார் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி கலாட்டாவில் ஈடுபட்டனர். எனவே குமாரசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது முன்னாள் முதல்–மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உடன் இருந்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு சதானந்தகவுடா நிருபர்களிடம் கூறுகையில், “முதல்–மந்திரியாக இருந்து கொண்டு சட்டம்–ஒழுங்கை கெடுக்கும் நோக்கத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக மக்கள் வீதிக்கு வந்து போராடுமாறு குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார். இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. மேலும் எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பாவின் வீட்டை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். போராட்டம் நடத்த மக்களுக்கு முதல்–மந்திரியே அழைப்பு விடுத்தது சட்டப்படி குற்றம். இது இந்திய தண்டனை சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் ஆகும். அதன்படி குமாரசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.

முதல்–மந்திரி மீது போலீஸ் டி.ஜி.பி.யிடமும் புகார்

சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் கோவிந்த் கார்ஜோள், ஷோபா எம்.பி., ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் பெங்களூரு நிருபதுங்கா ரோட்டில் உள்ள மாநில போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு சென்று டி.ஜி.பி. நீலமணி ராஜுவை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

அந்த புகாரில் “முதல்–மந்திரி குமாரசாமி பா.ஜனதாவுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என்று சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளார். அவரது பேச்சால் மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மாநில மக்களிடையே அமைதியை கெடுக்கும் விதமாக முதல்–மந்திரி குமாரசாமி பேசியுள்ளார். இது அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானதாகும். முதல்–மந்திரி பதவியில் இருந்து கொண்டு பா.ஜனதாவுக்கு எதிராக போராட வேண்டும் என்று மக்களை தூண்டி விடுகிறார். அதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஷோபா எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில்,“ கர்நாடக மாநில வரலாற்றில் முதல்–மந்திரி பதவியில் இருந்த ஒருவர் இதுபோன்று பேசியது கிடையாது. முதல்–மந்திரி பதவி பறிபோய் விடும் என்பதால் மாநில மக்களை பா.ஜனதாவுக்கு எதிராக போராட தூண்டி விடுகிறார். குமாரசாமியின் பேச்சால் மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. எடியூரப்பா வீட்டு முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அவரது வீட்டிற்குள் நுழைய முயற்சிக்கிறார்கள். அதனால் முதல்–மந்திரி குமாரசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வதுடன், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.

எடியூரப்பா வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் பா.ஜனதாவுக்கு எதிராக மாநில மக்கள் போராட வேண்டும் என்று முதல்–மந்திரி குமாரசாமி பேசினார். அதன்பிறகு, பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள பா.ஜனதா மாநில தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பாவின் வீட்டை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சியினர் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு உண்டானது. இந்த சம்பவத்தை தொடர்ந்து டாலர்ஸ் காலனியில் உள்ள எடியூரப்பாவின் வீட்டிற்கு சதாசிவநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் எடியூரப்பா வீட்டை சுற்றி கர்நாடக ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவரது வீட்டிற்கு வருபவர்களை முறையாக பரிசோதனை செய்த பின்பே உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கிறார்கள். மேலும் எடியூரப்பா வீட்டு முன்பாக போராட்டத்தில் ஈடுபடவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


Next Story