ரூ.2 கோடி நகைகள் மோசடி செய்த லண்டன் தொழில் அதிபர் கைது


ரூ.2 கோடி நகைகள் மோசடி செய்த லண்டன் தொழில் அதிபர் கைது
x
தினத்தந்தி 21 Sep 2018 11:47 PM GMT (Updated: 21 Sep 2018 11:47 PM GMT)

நகைக்கடைக்காரரிடம் ரூ.2 கோடி நகைகளை மோசடி செய்த லண்டன் தொழில் அதிபர் 7 ஆண்டுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பையை சேர்ந்தவர் சுனில். இவர் ஜவேரி பஜாரில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். நகைகளை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார். கடந்த 2009-ம் ஆண்டு சுனிலுக்கு, ஓஷிவாராவை சேர்ந்த சுரேந்திரா (வயது61) என்பவரின் அறிமுகம் கிடைத்தது.

லண்டனில் தொழில் அதிபராக இருந்து வருவதாக தெரிவித்த அவர் அவசரமாக தனக்கு 16 கிலோ தங்கநகைகள் வேண்டும் என சுனிலிடம் கூறினார். மேலும் பணத்தை அவரது வங்கி கணக்கில் செலுத்தி விடுவதாக கூறியிருந்தார். இதனை நம்பிய சுனில் ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகளை விமானம் மூலம் பார்சலில் லண்டனுக்கு அனுப்பி வைத்தார்.

அந்த நகை சுரேந்திராவுக்கு கிடைத்தது. ஆனால் அவர் கூறியபடி சுனிலுக்கு பணம் தரவில்லை. மேலும் அவருடனான தொடர்புகளையும் துண்டித்தார்.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுனில், கடந்த 2011-ம் ஆண்டு சகார் போலீசில் சுரேந்திரா மீது புகார் கொடுத்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். மேலும் அவர் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டார்.

இதற்கிடையே இந்த மோசடியில் தொடர்பு உள்ளதாக அவரது மனைவி யாமினி கடந்த 2012-ம் ஆண்டு கைதானார். ஆனல் சுரேந்திராவை கடந்த 7 ஆண்டுகளாகியும் போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், லண்டன் செல்வதற்காக சுரேந்திரா அமிர்தசரஸ் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் போலீசார் அங்குள்ள விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அமிர்தசரஸ் விமான நிலையத்துக்கு வந்த சுரேந்திராவை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக அவர் மும்பை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.


Next Story