புதியதாக தேர்வு செய்யப்பட்ட இளைஞர் காங்கிரசார் நாளை பதவியேற்பு - அமைச்சர் நமச்சிவாயம் அறிக்கை


புதியதாக தேர்வு செய்யப்பட்ட இளைஞர் காங்கிரசார் நாளை பதவியேற்பு - அமைச்சர் நமச்சிவாயம் அறிக்கை
x
தினத்தந்தி 22 Sep 2018 12:00 AM GMT (Updated: 21 Sep 2018 11:59 PM GMT)

புதிதாக தேர்வு செய்யப்பட்ட இளைஞர் காங்கிரசார் நாளை பதவியேற்க உள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை பொதுப்பணித்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற்ற நிர்வாகிகள் பதவியேற்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கம்பன் கலையரங்கில் நடக்கிறது. விழாவுக்கு மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் தலைமை தாங்குகிறார்.

வெற்றிபெற்றவர்களுக்கு அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் கேசவ் சந்த் யாதவ், முதல்–அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றுகின்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் நமச்சிவாயம், இளைஞர் காங்கிரசின் அகில இந்திய துணைத்தலைவர் ஸ்ரீனிவாஸ், செயலாளர் ஜெபி மேத்தர் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

அமைச்சர்கள் மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, எம்.என்.ஆர்.பாலன், தனவேலு, தீப்பாய்ந்தான், விஜயவேணி, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசுகிறார்கள்.

விழாவில் மாநில துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், அனைத்து பிரிவு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். புதுவை மாநிலத்துக்கு வரும் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் கேசவ் சந்த் யாதவ், துணைத்தலைவர் ஸ்ரீனிவாஸ், செயலாளர் ஜெபி மேத்தர் ஆகியோருக்கு கோரிமேடு எல்லையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் மேளதாளம் முழங்க வாணவேடிக்கையுடன் மாபெரும் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர் 100–க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன பேரணியுடன் ஊர்வலமாக நகரின் முக்கிய சாலை வழியாக அழைத்து வரப்படுகிறார்கள். வரவேற்பு விழாவில் சிலம்பாட்டம், ஒயிலாட்டம், தஞ்சாவூர் பெரியமேளம், செண்டை மேளம், மஸ்கிராத் மற்றும் தமிழ் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story