பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை உடனே கைது செய்ய வேண்டும் - த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி
எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று கோபியில் த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
கடத்தூர்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் கோபி வந்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:–
அக்டோபர் 7–ந் தேதி திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. தமிழக சட்டமன்றத்தில் நீட்தேர்வுக்கு எதிராக 2 தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ள போதும், மத்திய அரசு தமிழகத்தில் நீட் தேர்வை திணித்துள்ளது. முத்தலாக் குறித்த அவசர சட்டம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது மட்டுமல்ல கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிராகவும் உள்ளது. இந்த சட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. முஸ்லிம் பெண்கள் மீதான அக்கரையினால் இச்சட்டம் கொண்டு வரப்படவில்லை.
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள போதும் அவர் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வருவது தமிழக காவல்துறைக்கு களங்கம் விளைவிக்கும் செயலாக உள்ளது. உடனே அவரை கைதுசெய்ய தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜீவ்காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பியுள்ளது. அதற்கு கவர்னர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரிவரம்புக்குள் கொண்டு வர வேண்டும்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வினால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 2019–ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி படுதோல்வி அடையும். அதற்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அமையும்.
இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.