தஞ்சையில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்; 3 பேர் கைது


தஞ்சையில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 22 Sep 2018 10:15 PM GMT (Updated: 22 Sep 2018 7:25 PM GMT)

தஞ்சையில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் திருவையாறில் இருந்து தஞ்சை நோக்கி நேற்று முன்தினம் மதியம் அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை திருவையாறை அடுத்த பெரம்பூரை சேர்ந்த நடராஜமூர்த்தி என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக திருவிடைமருதூர் தாலுகா திருபுவனத்தை சேர்ந்த மகேந்திரன் இருந்தார்.

அப்போது பஸ்சில் பயணம் செய்த தஞ்சை கொடிக்காலூர் புதுத்தெருவை சேர்ந்த சுதாகர் என்பவருக்கும், கண்டக்டர் மகேந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் சுதாகர் இறங்கி சென்று விட்டார். இந்த நிலையில் பஸ் தஞ்சை வந்து விட்டு மாலையில் திருவையாறு நோக்கி சென்று கொண்டிருந்தது.

தஞ்சையை அடுத்த கரந்தை கோடியம்மன்கோவில் அருகே சென்ற போது சுதாகர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் பஸ்சை வழிமறித்து கண்டக்டர் மகேந்திரன், டிரைவர் நடராஜமூர்த்தி ஆகியோரை தாக்கினர். இதையடுத்து தாக்கியவர்களை கைது செய்யக்கோரி பஸ் அங்கேயே நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் காயம் அடைந்த 2 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது குறித்து கண்டக்டர் மகேந்திரன் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சுதாகர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அரசு ஊழியர்களை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவிட்டார்.

அதன் பேரில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி டிரைவர், கண்டக்டரை தாக்கிய சுதாகர், கொடிக்காலூரை சேர்ந்த சுரேந்திரன், சுங்காந்திடல் பெரிய தெருவை சேர்ந்த கண்ணையன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story