கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவு: 24 ஆண்டுகளுக்கு பிறகு தம்பதி கைது


கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவு: 24 ஆண்டுகளுக்கு பிறகு தம்பதி கைது
x
தினத்தந்தி 23 Sept 2018 4:45 AM IST (Updated: 23 Sept 2018 2:26 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் அருகே இளம்பெண் கொலை வழக்கில், கோர்ட்டில் ஆஜராகாமல் 24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

ஒட்டன்சத்திரம்,

24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தம்பதி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பெருமாள்நாயக்கன்வலசு கிராமத்தை சேர்ந்தவர் அத்துவநாயக்கர். அவருடைய மகள் பத்மாவதி (வயது 20). இவர், கடந்த 1994-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த நகைக்கு ஆசைப்பட்டு, பக்கத்து வீட்டை சேர்ந்த ஜெயராஜ் (65), அவருடைய மனைவி அனுசியா (60) ஆகியோர் சேர்ந்து பத்மாவதியை கட்டையால் அடித்து கொலை செய்தனர்.

பின்னர் பத்மாவதி அணிந்திருந்த நகையை திருடி கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதியை கைது செய்தனர். மேலும் பத்மாவதி அணிந்திருந்த நகை கவரிங் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த தம்பதி, கடந்த 24 ஆண்டுகளாக தொடர்ந்து கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தனர். இதைத்தொடர்ந்து தம்பதியை பிடிக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டனர்.

இதற்கிடையே தலைமறைவான தம்பதி, வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார், தம்பதியை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்களை, அம்பிளிக்கை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.


Next Story