ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 7 பேரை விடுதலை செய்ய கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - தொல்.திருமாவளவன்


ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 7 பேரை விடுதலை செய்ய கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - தொல்.திருமாவளவன்
x
தினத்தந்தி 22 Sep 2018 11:00 PM GMT (Updated: 2018-09-23T03:00:27+05:30)

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று, பயங்கரவாதத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் துரை.ரவிக்குமார், சிந்தனைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:-

டிசம்பர் 10-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முழு சக்தியை காட்டக்கூடிய வகையில் தேசத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் திருச்சியில் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாடு தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும்.

பயங்கரவாதத்தை எதிர்த்து போராடி கொண்டிருக்கிற ஒரே அமைப்பு விடுதலை சிறுத்தைகள் இயக்கம் என்பதை உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஏழை, எளிய மக்கள் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் உள்ளனர். சனாதன் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் ஏற்கனவே 4 பேரை கொலை செய்துள்ளனர். இந்தியாவில் இன்னும் 34 பேரை குறிவைத்து பட்டியலிட்டு இருக்கிறார்கள். அவர்களில் யாரும் முஸ்லிம் கிடையாது. இந்துக்களை மட்டும் குறிவைத்துள்ளனர்.

இந்த அமைப்பை சேர்ந்தவர்களால்தான் துரை.ரவிக்குமாருக்கு மிரட்டல் வந்திருக்கலாம். உடனே நாங்கள் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும், புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமியையும் சந்தித்து முறையிட்டோம். புதுச்சேரி முதல்-அமைச்சர், உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளை அழைத்து விவாதித்து உண்மைதான் என்பதை உறுதி செய்த பின்னர் புதுச்சேரியில் உள்ள துரை.ரவிக்குமாரின் வீட்டுக்கு பாதுகாப்பு அளித்தார். ஆனால் தமிழக முதல்-அமைச்சரோ அதைப்பற்றி பொருட்படுத்தவே இல்லை.தமிழ்நாடு போலீஸ் ரவுடிகளை பார்த்து ‘சல்யூட்’ அடிக்கிறார்கள். இங்கு ரவுடிகளுக்குத்தான் பாதுகாப்பு, சிந்தனையாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில்லை. இந்த தேசத்தில் என்ன நடக்கிறது என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும்.

அரசியலில் சனாதன் அமைப்பிற்கு எதிராக செயல்படுகிற ஒரே இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி. அதனால்தான் நம்மை பலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் கொள்கைக்காக நாம் களத்தில் நிற்கிறோம். எதிர்ப்புகள், விமர்சனங்களை பற்றி கவலைப்பட தேவையில்லை. சாதிய, மதவாதத்துக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். விரைவில் இந்தியாவில் பெரிய மாற்றம் ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், எச்.ராஜா இன்னும் கைது செய்யப்படாததற்கு தமிழக முதல்-அமைச்சருக்கு விடப்பட்ட சவால் என்றுதான் நான் கருதுகிறேன், எச்.ராஜா போன்றவர்கள் கைது செய்யப்படவில்லை என்று சொன்னால் முதல்வர் மீது உள்ள நம்பிக்கை பாழாகிவிடும். சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் யார் பேசினாலும் அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும்.

ஊழல் ஒழிப்பு சட்டம் நடைமுறைக்கு வருவது அவசியம் என்பதை தமிழக அமைச்சர்கள் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் உணர்த்துகின்றன. எனவே அந்த சட்டத்தை விரைவாக நடைமுறைபடுத்தும் வகையில் அமைப்பை உருவாக்க வேண்டும். ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரும் விடுதலை செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ள நிலையில் கவர்னருக்கு அதிகாரம் இருந்தும் அதன் மீது முடிவெடுக்க தயங்கிக்கொண்டு வருகிறார். அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதில் மாவட்ட செயலாளர்கள் ஆற்றலரசு, தனபால், பாமரன், சேரன், மாநில நிர்வாகிகள் சேரலாதன், இளமாறன், தமிழ்மாறன், பிரின்ஸ்சோமு, செய்தி தொடர்பாளர் தமிழேந்தி, நகர செயலாளர்கள் இரணியன், சரவணன், கள்ளக்குறிச்சி தொகுதி செயலாளர் மதியழகன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story