வேலூர் மாவட்ட, 10 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பசுமையாக்க திட்டம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு


வேலூர் மாவட்ட, 10 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பசுமையாக்க திட்டம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 22 Sep 2018 10:49 PM GMT (Updated: 22 Sep 2018 10:49 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைகளில் 10 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பசுமையாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

வேலூர்,

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. சார்பில் ‘பாலாற்றை காப்போம், கரம் கோர்ப்போம்’ என்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நேற்று இரவு நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளர் கே.எல்.இளவழகன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் டி.கே.ராஜா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் பால் போன்று ஓடிய ஆறு தற்போது பாழாய் போகி விட்டது. தமிழகத்தை ஆட்சி செய்த தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் தான் இதற்கு முக்கிய காரணமாகும். தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்து அடுத்த சந்ததியினர் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும். கடந்த 22 ஆண்டுகளாக பாலாற்றை காப்பாற்ற பா.ம.க. கட்சி போராடி வருகிறது. பாலாற்றில் நாளொன்றுக்கு 70 லட்சம் லிட்டர் கழிவுகள் நேரடியாக கலக்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழகத்தில் 47 ஆயிரம் ஏரிகள் காணப்பட்டன. தற்போது 42 ஆயிரம் ஏரிகள் மட்டுமே உள்ளன. 5 ஆயிரம் ஏரிகள் காணாமல் போய்விட்டன. தமிழகத்தில் உள்ள தாமிரபரணி, காவிரி, வைகை உள்ளிட்ட அனைத்து ஆறுகளையும் பாதுகாக்க பா.ம.க. பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. பா.ம.க.வினர் சினிமாவுக்கு எதிரானவர்கள் கிடையாது. சினிமா கலாசாரத்துக்கு எதிரானவர்கள். நடிகர்களின் கட்-அவுட்டுகளுக்கு பால், பீர் அபிஷேகம், கற்பூரம் ஏற்றுவது போன்ற கலாசாரம் வேண்டாம் என்றுதான் கூறுகிறோம்.

தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டமான வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க வேண்டும். கோடை காலங்களில் வேலூர் மாவட்டத்தில் 110 டிகிரி வெயில் பதிவாகும். வருங்காலங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்க கூடும். இதனை தடுக்க வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மலைகளிலும் மரங்களை நட்டு பசுமையாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வரும் 5 ஆண்டுகளில் மலைகளில் 10 லட்சம் புங்கை, வேம்பு மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும். இதில், தனியார் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், ரோட்டரி கிளப்புகள், பொதுமக்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

பாலாற்றை பாதுகாக்க ஆந்திராவில் கட்டப்பட்ட தடுப்பணைகளை அகற்ற வேண்டும். பாலாற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும். தோல் பதனிடும் தொழிற்சாலைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். தென்பெண்ணை-பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து துறைகளிலும் ஊழல் பெருகி விட்டது. இந்த ஆட்சி முடிந்தவுடன் முதல்-அமைச்சர் உள்பட அனைத்து அமைச்சர்களும் ஜெயிலில் கம்பி எண்ணுவார்கள். சேலம்-சென்னை 8 வழிச்சாலை வராது. 8 வழிச்சாலை திட்டம் கொள்ளை அடிக்கவே போடப்பட்டது. அதற்காக ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பணத்தை வைத்து தமிழகத்தில் உள்ள ஆறுகளில் தடுப்பணைகள் கட்டினால் ஆண்டுக்கு 100 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கலாம்.

அண்டை மாநிலங்கள் நீர்நிலைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் தமிழக அரசு இலவச திட்டங்களுக்கு ரூ.62 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது. அதனை வைத்து பல அணைகள் கட்டியிருக்கலாம். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரிகள் ஆர்.வேலு, என்.டி.சண்முகம், மாநில துணைத்தலைவர் நடிகர் ரஞ்சித் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். மாநில வன்னியர் சங்க செயலாளர் எம்.கே.முரளி, மாநில துணை பொதுச்செயலாளர் சரவணன், மாவட்ட செயலாளர்கள் கிருபாகரன், கரிகாலன், வெங்கடேசன், கிருஷ்ணன், வேல்முருகன், ரவி, மாவட்ட தலைவர்கள் சத்யாநாயுடு, ஜெகன்நாதன், ஆறுமுக முதலியார், மாநில இளைஞர் சங்க துணை அமைப்பு தலைவர் பகவான் கார்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள் சிவப்பிரகாசம், எல்.வி.மணி, சிறப்பு மாவட்ட செயலாளர் நல்லூர் சண்முகம், மாநில துணைத்தலைவர் பொன்னுசாமி, துணை செயலாளர் சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், முன்னாள் மாவட்ட செயலாளர் பி.கே.வெங்கடேசன், மாவட்ட துணைச்செயலாளர் செங்குட்டுவன், மாவட்ட துணைத்தலைவர் சசிக்குமார், மாவட்ட அமைப்புச்செயலாளர் அக்னிவேல்முருகன், நிர்வாகிகள் மாநிலத்துணை தலைவர் ரமேஷ்நாயுடு, சுரேஷ்குமார், கிரிபிரசாந்த், ஒன்றிய செயலாளர்கள் முரளி, அன்பரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ராணிப்பேட்டையில் நடந்த விழிப்புணர்வு பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசுகையில், ‘மக்களுக்கு ஆரோக்கியம் வேண்டும். இதற்கு பாலாறு பாதுகாக்கப்பட வேண்டும். தஞ்சைக்கு அடுத்தபடியாக நெல் விளையும் பகுதியாக இந்த மாவட்டம் இருந்தது. இன்று வறண்டு காணப்படுகிறது. முன்பு பெய்த மழை வெள்ளத்தில் 31 டி.எம்.சி. தண்ணீர் கடலில் சென்று கலந்து வீணாகி விட்டது. இதில் 1 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைத்திருந்தாலே ராணிப்பேட்டை பகுதிக்கு 10 ஆண்டுகளுக்கு குடிநீர் பஞ்சம் வராது. இதற்கு ஆட்சி மாற்றம் வேண்டும். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, இலவச கல்வி, இலவச மருத்துவம் வழங்கப்படும். மதுக்கடைகள் மூடப்படும். அதற்கு ஒரே ஒரு முறை பா.ம.க.விற்கு வாய்ப்பு தாருங்கள்’ என்றார்.

தொடர்ந்து காட்பாடியில் சித்தூர் பஸ் நிறுத்தம் அருகில் நடந்த பிரசார கூட்டத்திலும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

Next Story