கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி
கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சோலூர்மட்டம் பிரிவு கெங்கரை கூட்டாடாவை சேர்ந்தவர் சாமிதாஸ் (வயது 63), தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை 4 மணியளவில் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் குட்டியுடன் இருந்த காட்டு யானை ஒன்று சாமிதாசை துரத்தியது.
காட்டு யானையிடம் இருந்து தப்பிக்க அவர் அங்கிருந்து ஓட முயன்றார். ஆனால் அதற்குள் காட்டு யானை அவரை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த அவர் அலறி துடித்தார். இவருடைய அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து காட்டு யானையை அங்கிருந்து விரட்டினர்.
பின்னர் படுகாயமடைந்த சாமிதாசை கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் குன்னூர் எம்.எல்.ஏ. சாந்தி ராமு, மாவட்ட வனத்துறை அதிகாரி சுமேஸ் சோமன் விரைந்து வந்து காட்டு யானை தாக்கி உயிரிழந்த சாமிதாசின் மனைவி மேரியிடம் ஆறுதல் கூறினர்.
பின்னர், மேரியிடம் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிதி உதவி அளித்தனர். மேலும் ரூ.3½ லட்சம் நிதி விரைவில் வழங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.