மோட்டார் சைக்கிள் விபத்தில் காப்பீடு பெற்றதில் முறைகேடு: போலீஸ் அதிகாரி உள்பட 5 பேருக்கு சிறை தண்டனை
மோட்டார் சைக்கிள் விபத்தில் காப்பீடு பெற்றதில் முறைகேட்டில் உடந்தையாக இருந்த போலீஸ் அதிகாரி உள்பட 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியை சேர்ந்தவர் வீரராகவன். இவர் புதுவை போக்குவரத்து துறையில் துணை ஆணையராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மகன் கருணாகரன். இவர் தனது நண்பரான முத்துகுமார் என்பவருடன் கடந்த 2004–ம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது ஏற்பட்ட விபத்தில் முத்துக்குமார் காயம் அடைந்தார். இதுகுறித்து அப்போதைய போக்குவரத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, ஏட்டு கலியபெருமாள் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். இதில் விபத்தில் காயம் அடைந்ததற்காக காப்பீடு நிறுவனத்திடம் இருந்து காப்பீடு தொகை பெறப்பட்டது.
இதற்கிடையே மோட்டார் சைக்கிள் விபத்தில் காப்பீடு தொகை பெற்றதில் முறைக்கேடு நடந்ததாக காப்பீடு நிறுவனம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து சுந்தரமூர்த்தி, கலியபெருமாள், வீரராகவன், கருணாகரன், முத்துகுமார் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
இதில் விபத்து நடந்த மோட்டார் சைக்கிளுக்கு உரிய காப்பீடு இல்லை என்பதும் அதற்கு பதிலாக காப்பீடு செய்யப்பட்டு இருந்த ஒரு மோட்டார் சைக்கிளை மாற்றி வைத்து காப்பீடு தொகை பெறப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை புதுச்சேரி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தனபால் முன்னிலையில் நடந்தது. விசாரணை முடிந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்ற சுந்தரமூர்த்தி, பதவி உயர்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் ஆகியோருக்கு 3 பிரிவுகளின் கீழ் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையும், வீரராகவன், கருணாகரன், முத்துகுமார் ஆகியோருக்கு 3 பிரிவுகளின் கீழ் தலா 6 மாதம் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கக்கோரி நீதிபதி தனபால் தீர்ப்பு கூறினார்.
அதேபோல் சுந்தரமூர்த்தி, கலியபெருமாள், வீரராகவன், கருணாகரன் ஆகியோருக்கு தலா ரூ.4 ஆயிரமும், முத்துகுமாருக்கு ரூ.2 ஆயிரமும் அபராதமும் விதிக்கப்பட்டது.