நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீட்டில் 63 பவுன் நகைகள் கொள்ளை போலீஸ் விசாரணை


நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீட்டில் 63 பவுன் நகைகள் கொள்ளை போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 26 Sept 2018 4:30 AM IST (Updated: 26 Sept 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

அகஸ்தீஸ்வரத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீட்டில் 63 பவுன் நகைகள் கொள்ளை போனது. வெளிமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டினார்களா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

தென்தாமரைகுளம்,

குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தெற்கு சாலை சி.எஸ்.ஐ. சர்ச் அருகில் வசிப்பவர் ஸ்டாலின் சாம் (வயது 50). தேங்காய் மற்றும் மளிகை பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி உஷா பரிடா (வயது 46). நெல்லை நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் வரைபட அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுடைய மகன் லெஸ்லி (18). இவர், சென்னையில் அரசு தேர்வுக்கான பயிற்சி பள்ளியில் படித்து வருகிறார்.

உஷா பரிடா நெல்லையில் பணிபுரிந்து வருவதால் அங்கேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறார். ஸ்டாலின் சாம் அகஸ்தீஸ்வரத்தில் சொந்த வீட்டில் இருந்து தனது ஏற்றுமதி தொழிலை கவனித்து வருகிறார். விடுமுறை நாட்களில் ஸ்டாலின் சாம் நெல்லைக்கு சென்று மனைவியை பார்த்து விட்டு வருவது வழக்கம்.

இதற்கிடையே தனது தொழில் தேவைக்காக புதிய கார் ஒன்று வாங்க ஸ்டாலின் சாம் நினைத்தார். அதுவும் வங்கி லாக்கரில் உள்ள தன்னுடைய மனைவியின் நகைகளை அடகு வைத்து அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் கார் வாங்க முடிவு செய்தார். அதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர், மனைவியை பார்ப்பதற்கு நெல்லைக்கு செல்லவில்லை. மாறாக நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் ஸ்டாலின் சாம் நாகர்கோவிலில் உள்ள ஒரு வங்கியின் லாக்கரில் வைத்திருந்த தன்னுடைய மனைவியின் நகைகளை திருப்பினார்.

அதனை அடகு வைத்து பணம் திரட்ட முடிவு செய்தார். அதற்கு முன்னதாக நெல்லைக்கு சென்று மனைவியை சந்தித்து விட்டு கார் வாங்குவது மற்றும் நகைகளை அடகு வைப்பது தொடர்பாக ஆலோசனை செய்து விட்டு வரலாம் என ஸ்டாலின் சாம் நினைத்து இருந்ததாக தெரிகிறது. லாக்கரில் இருந்து திருப்பிய நகைகளை வீட்டின் மாடியில் உள்ள அறையில் பீரோவில் வைத்து விட்டு நெல்லைக்கு காரில் சென்றார். அங்கு மனைவியை பார்த்து விட்டு நேற்று காலை 10 மணி அளவில் ஸ்டாலின் சாம் அகஸ்தீஸ்வரம் வந்தார்.

தனது வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றார். வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்டாலின் சாம், வீட்டின் மாடிப்பகுதிக்கு சென்று பார்த்தார். அங்கு நகைகள் இருந்த பீரோ திறந்து கிடந்தது. துணிகள் அங்கும் இங்கும் சிதறி கிடந்தன. பீரோவில் அவர் வைத்திருந்த 63 பவுன் நகைகளும் கொள்ளை போய் இருந்தது.

தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசெல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஸ்டாலின் சாம் வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொள்ளை சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஸ்டாலின் சாம், வங்கி லாக்கரில் இருந்து நகைகளை எடுத்து வந்து வீட்டில் வைத்துவிட்டுதான் நெல்லைக்கு சென்றுள்ளார். அவர் வங்கியில் இருந்து நகைகளை வீட்டுக்கு கொண்டு வரும் போதே மர்மநபர்கள் அவரை கண்காணித்து பின்தொடர்ந்து வந்துள்ளனர். அப்போது ஸ்டாலின் சாம் வீட்டின் மாடிக்கு சென்று நகைகளை பீரோவில் வைப்பது வரை மர்மநபர்கள் அவரை நோட்டமிட்டுள்ளனர். இரவில் ஸ்டாலின் சாம் வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த கொள்ளையர்கள் தங்களது கொள்ளை திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர்.

அதாவது ஸ்டாலின் சாம் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டின் மேல் மாடிக்கு சென்ற அவர்கள், பீரோ சாவியை தேடி உள்ளனர். அங்கு கிடந்த கட்டிலில் தலையணைக்கு கீழே பீரோ சாவி இருந்ததை தேடி கண்டுபிடித்தனர். அதன்மூலம் பீரோவை திறந்து நகைகளை எளிதாக கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்பநாய் ஏஞ்சல் வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த இடத்தில் இருந்து அந்த பகுதியில் சுற்றி சுற்றி வந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டின் சுவர் மற்றும் உடைக்கப்பட்ட கதவுகளில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.

கொள்ளை தொடர்பாக தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்டாலின் சாம், எந்த வங்கி லாக்கரில் இருந்து நகைகளை எடுத்து வந்தாரோ? அந்த வங்கியில் இருந்து அவரது வீடு வரை உள்ள பகுதியில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஸ்டாலின் சாம் வரும் போது அவரை பின்தொடர்ந்து யார் வருகிறார்கள் என்பதை கண்டுபிடித்தால்தான் கொள்ளையர்களை பற்றிய துப்பு துலங்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஆட்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் இவ்வளவு துணிகர கொள்ளை நடந்து இருப்பது அந்த பகுதி மக்களை அச்சமடைய செய்துள்ளது. ஸ்டாலின் சாமை தொடர்ந்து கண்காணித்து இவ்வளவு சாமர்த்தியமாக கொள்ளை சம்பவத்தை கொள்ளையர்கள் அரங்கேற்றி உள்ளனர்.

எனவே பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்களாகத்தான் இருக்க வேண்டும். மேலும் வெளி மாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இருந்தாலும் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story