எத்தனை கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும் தி.மு.க.வால் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது - உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு


எத்தனை கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும் தி.மு.க.வால் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது - உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு
x
தினத்தந்தி 26 Sept 2018 4:52 AM IST (Updated: 26 Sept 2018 4:52 AM IST)
t-max-icont-min-icon

எத்தனை கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும் தி.மு.க.வால் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது என்று திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருப்பூர்,

இலங்கையில் ஈழ தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் இலங்கை ராணுவத்துக்கு உதவியதன் மூலமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமாக தி.மு.க., காங்கிரஸ் கட்சியினரை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி அ.தி.மு.க. திருப்பூர் மாநகர், புறநகர் மாவட்டத்தின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நேற்று இரவு திருப்பூர் புதிய பஸ் நிலையம் 60 அடி ரோட்டில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமை தாங்கி பேசினார். திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார் வரவேற்றார். மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசும், மத்தியில் காங்கிரஸ் அரசும் இருந்த காலத்தில் தான் இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போதைய இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சே இந்திய ராணுவம் உதவி செய்தது என்று தெரிவித்து இருக்கிறார். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க., இலங்கையில் போர் நிறுத்தம் செய்வதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனது குடும்பத்தில் உள்ளவர்களின் நலனுக்காக தி.மு.க.வினர் கட்சியை நடத்துகிறார்கள்.

தமிழக மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து ஒவ்வொரு துறை மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை அ.தி.மு.க. அரசு செய்து வருகிறது. 2023-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் ஏழை மக்கள் இருக்க கூடாது என்ற நோக்கத்தோடு விஷன் 2023 என்ற திட்டத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து அதற்கான திட்டங்களை தொடர்ந்து அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை. தி.மு.க இன்னும் 10, 15 என எத்தனை கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும் கூட அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் பேசியதாவது:-

ஈழத்தமிழர் படுகொலைக்கு காரணமான தி.மு.க.வுடன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சேர்ந்து விட்டார். அதுபோல் தி.மு.க.வுடன் கம்யூனிஸ்டுகள் கூட்டணி சேர காத்திருக்கிறது. ஜெயலலிதா வழியில் அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வை வீழ்த்த தி.மு.க.வால் ஒருபோதும் முடியாது.

அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்கள் சிலர் சேர்ந்து சுற்றி வருகிறார்கள். ஒருவர் தான் செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் அதிகமாக இருப்பது போன்ற மாயை காட்டி வருகிறார். கானல் நீர் போல் காணாமல் போய் விடுவார்கள். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றும். அதுபோல் வரும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று அ.தி.மு.க. அரசு தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து பொதுக்கூட்ட மேடையில் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. குணசேகரன், பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ. கரைப்புதூர் நடராஜன், திரைப்பட இயக்குனர் ஷக்தி சிதம்பரம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில துணை செயலாளர் அமுல் கந்தசாமி, முன்னாள் எம்.பி. தியாகராஜன், மாவட்ட துணை செயலாளர் சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.



Next Story